Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெள்ள சேதம் குறித்து மத்திய ஆய்வுக் குழுவால் சரியான மதிப்பீட்டிற்கு வர இயலாது: சவுந்தரராஜன்

வெள்ள சேதம் குறித்து மத்திய ஆய்வுக் குழுவால் சரியான மதிப்பீட்டிற்கு வர இயலாது: சவுந்தரராஜன்
, ஞாயிறு, 29 நவம்பர் 2015 (13:25 IST)
மத்திய அரசின் ஆய்வுக் குழுவினால் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து சரியான மதிப்பீட்டிற்கு வர இயலாது என்றும் ஆய்வு என்பது சம்பிரதாயத்திற்காகவே நடத்தப்பட்டுள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன் குற்றம் சாற்றியுள்ளார்.
 
இது குறித்து சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
வெள்ள தேசத்தைப் பார்வையிடவும், ஆய்வு செய்யவும் வந்த மத்திய அரசின் ஆய்வுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சந்திக்காமல் சென்றிருப்பது வண்மையான கண்டனத்திற்கு உரியது.
 
கனமழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சென்னை நகரமும் இதனால் கடுமையான நாச நஷ்டத்திற்கு உள்ளானது.
 
தாழ்வான பகுதிகளிலும், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளிலும், குடிசைப் பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
 
வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் துணிமணிகள், படுக்கை, தொலைக்காட்சி பெட்டிகள், மேஜை மின் விசிறிகள், சலவை இயந்திரங்கள், இஸ்திரி பெட்டி, பாத்திரங்கள், ரேசன் கார்டுகள், சான்றிதழ்கள் போன்றவை நாசமாகி விட்டன.
 
இந்த இழப்புகளுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்பட வில்லை. வெள்ள தேசத்தை ஆய்வு செய்ய வந்த மத்திய அரசின் ஆய்வுக்குழு வட சென்னையில் முதலமைச்சர் தொகுதியில் மட்டும் இரண்டு தெருக்களை பார்வையிட்டு விட்டு பக்கத்து மாவட்டத்திற்குப் போய் விட்டது.
 
ஆய்வுக்குழு வட சென்னையில் அரைமணி நேரம் கூட செலவழிக்க வில்லை. கடுமையாக பாதிக்கப்பட்ட பெரம்பூர் தொகுதிக்குள் வரவே இல்லை.
 
ஒரு வாரம் வெள்ளத்தில் மிகுந்த வில்லிவாக்கம், சிட்கோ ஆகிய பகுதிகளுக்குக் கூடபோகவில்லை. இந்தக் குழு வட சென்னையை பார்வையிடவே இல்லை என்பதுதான் உண்மை.
 
சட்டமன்ற உறுப்பினரான என் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. அவர்களை சந்திக்க இந்த ஆய்வுக்குழு அக்கறை காட்டவில்லை.
 
இந்தக் குழுவினால் சரியான மதிப்பீட்டிற்கு வர இயலாது. ஆய்வு என்பது சம்பிரதாயத்திற்காகவே நடத்தப்பட்டுள்ளது.
 
வெள்ள நீர் வெளியேறிய பிறகும் கழிவு நீர் சூழ்ந்த நிலையிலேயே சென்னை மக்கள் வாழநேர்ந்தது. உடல் நலக்கேட்டினால் மருத்துவச் செலவிற்காகவே மக்கள் பெருந்தொகையை செலவழித்துள்ளனர்.
 
ஆய்வுக்குழுவின் அலட்சியப் போக்கை கண்டிப்பதோடு, மத்திய அரசு மாநில அரசு கோரியுள்ள தொகையை வழங்க வேண்டுமெனவும், மாநில அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil