Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்களை வான் வழியாக அழைத்து வந்து தீபாவளி கொண்டாட வைக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை

மீனவர்களை வான் வழியாக அழைத்து வந்து தீபாவளி கொண்டாட வைக்க வேண்டும் - ராமதாஸ் கோரிக்கை
, செவ்வாய், 10 நவம்பர் 2015 (09:38 IST)
விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை வான்வழியாக திருச்சி அழைத்து வந்து, தீபாவளி திருநாளைக் கொண்டாட வசதியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து, ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை சிறைகளில் கடந்த இரு மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 126 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள். தீபாவளிக்கு முன் அவர்கள் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படாதது இந்த மகிழ்ச்சியை தடுக்கிறது.
 
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 86 பேர் கடந்த மாதம் 28ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன. ஆனால், அவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில் மேலும் 40 மீனவர்களை சிங்களப்படை இரு கட்டங்களில் கைது செய்தது.
 
இலங்கை அரசின் இந்த அட்டூழியத்தை பாமக சார்பில் நான் கடுமையாக கண்டித்திருந்தேன். அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.
 
அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக 126 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மீனவர்களின் விடுதலைச் செய்தி அவர்களின் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியடையச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
 
ஆனால், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அழைத்து வருவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. மீனவர்கள் அவர்களின் குடும்பத்தினருடன் தீபாவளி திருநாளை கொண்டாடாவிட்டால் அவர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதற்கே பொருள் இல்லாமல் போய்விடும்.
 
ஒருவேளை அவர்களை கடற்படை படகுகளில் அழைத்து வருவதற்கு மோசமான தட்பவெப்பநிலை ஒரு தடையாக இருக்குமானால், அவர்களை வான்வழியாக திருச்சி அழைத்து வந்து, தீபாவளி திருநாளைக் கொண்டாட வசதியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
இப்போதைய நிலையில் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 46 படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. படகுகளை பறிமுதல் செய்வது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். 46 படகுகள் 368 மீனவர்களுக்கு நேரடியாகவும், நூற்றுக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கும்.
 
எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil