நெல்லை மாவட்டம் அம்பை காவல் நிலையத்தில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணிபுரிந்தவர் அருமைநாயகம் (35).
இவர் அதே காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலராக பணிபுரியும் பெண் காவலர் ராமு (29) என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை வன்புணர்ச்சி செய்துள்ளார். அருமைநாயகம் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மறைத்து பெண் காவலர் ராமுவுடன் பழகி வந்தார். ஒரு கட்டத்தில் இது குறித்து தெரியவந்த ராமு அருமைநாயகம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.
ஆனால் காவல்துறை அதிகாரிகள் மனு மீது எந்த விசாரணையும் நடத்தவில்லை மாறாக வழக்கை வாபஸ் பெறகோரி பெண் காவலர் ராமுவுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மதுரை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரித்து சம்பந்தப்பட்ட பயிற்சி உதவி ஆய்வாளர் அருமைநாயகம் மீது நடவடிக்கை எடுக்க கடந்த செப் 3 ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனாலும் காவல்துறை தரப்பில் எந்த ஒரு வழக்கு பதிவும் செய்யாமல் வழக்கை வாபஸ் பெறக்கோரி ராமுவிற்கு நிர்ப்பந்தம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராமு அக் 9 ஆம் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிசிக்கை பலனின்றி 10 ஆம் தேதி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்வதுடன் அருமைநாயகம் உள்ளிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் தினகரனிடம் பெண் காவலரின் தாயார் பார்வதி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இதை அடுத்து, சென்னை ஓமலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியில் உள்ள அருமைநாயக்கத்தை பயிற்சி பள்ளி முதல்வர் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், ராமுவின் உறவினர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 6 நாட்களாக இறந்த பெண் காவலரின் உடலை வாங்க மறுத்துள்ளனர்.