Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலமைச்சரை சந்திக்க விவசாயிகளுக்குத் தடையா?: வைகோ கொந்தளிப்பு

முதலமைச்சரை சந்திக்க விவசாயிகளுக்குத் தடையா?: வைகோ கொந்தளிப்பு
, வியாழன், 2 ஏப்ரல் 2015 (14:48 IST)
தமிழக முதலமைச்சரை சந்திக்க விவசாயிகளுக்கு தடை விதித்தது நியாயமல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
தேசிய, தென்னக நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவர் வழக்குரைஞர் திருச்சி அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை முன் வைத்து தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 
விவசாயிகள் வாங்கிய அனைத்துப் பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; வறட்சியால் அழிந்துவிட்ட விவசாயப் பயிர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டும்; 60 வயதான அனைத்து விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; நதிகள் இணைப்பை செயல்படுத்த வேண்டும்; நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் ஆகிய 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருச்சியில் விவசாயிகள் இரு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 
கடந்த மார்ச் 26 ஆம் தேதி திருச்சியில் இருந்து புறப்பட்டு, சென்னையில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டிருந்த விவசாயிகளை திருச்சியிலேயே காவல்துரை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்கள் ஊர்வலமாகச் சென்று திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
 
மார்ச் 31 ஆம் தேதி சென்னைக்கு வந்த விவசாயிகள், முதல்வரைச் சந்திக்க அனுமதிக்கப்படாமல் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 1 ஆம் தேதி விவசாயிகள் மெரினா கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
 
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் தேசிய, தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திருச்சி அய்யாகண்ணு உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வரைச் சந்திக்கவிடாமல் காவல்துறை முட்டுக்கட்டை போடுவதும், கைது செய்து திருப்பி அனுப்புவதும் வேதனை தருகிறது.
 
தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்த கரும்பு கொள்முதல் விலையை வழங்காமல், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்று ரூபாய் 3500, நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு, நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டது.
 
இந்நிலையில், முதல்வரைச் சந்தித்து விவசாயிகள் தங்கள் கோரிக்கையை எடுத்துரைக்கவும் தடைபோடுவது சரியல்ல. எனவே தமிழக அரசு திருச்சியில் இருந்து சென்னை வந்து போராட்டம் நடத்தும் விவசாய சங்கத்தினரை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil