Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மழை சரியான பாடம் புகட்டியுள்ளது; நீதிபதிகளின் கண்டனம் பொருத்தமானது: ராமதாஸ்

மழை சரியான பாடம் புகட்டியுள்ளது; நீதிபதிகளின் கண்டனம் பொருத்தமானது: ராமதாஸ்
, சனி, 21 நவம்பர் 2015 (15:26 IST)
சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத அரசுக்கும், ஏரி–குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கூறியிருப்பது தமிழக அரசுக்கு தெரிவித்த கண்டனம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
சென்னையில் மழைநீர் வடிகால் வசதிகள் மிக மோசமாக பராமரிக்கப்படுவது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத அரசுக்கும், ஏரி–குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது" என கூறியிருக்கிறது.
 
இதை கருத்து என்று கூறுவதை விட தமிழக அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்த கண்டனம் என்று கூறுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
 
சென்னையில் ஏரி, குளங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்த போதிலும் கடந்த 50 ஆண்டு கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது, மழை நீரை கடலுக்கு கொண்டு செல்லும் ஆறுகள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாதது, மழை நீர் வடிகால்கள் சீரமைக்கப்படாமல் கழிவுநீர் குழாய்களில் மழைநீர் சேர்ந்து ஓட அனுமதிக்கப்பட்டது ஆகியவைதான் சென்னையில் மழை பாதிப்பு அதிகரிக்க காரணம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
 
அதேநேரத்தில் சென்னையில் ஏரி–குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை பாடம் புகட்டியிருப்பதாக உயர் நீதிமன்றம் கூறியிருப்பதில் முழு உண்மை இல்லை.
 
ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வீடுகளை கட்டி குடியிருப்பது பொதுமக்கள்தான் என்ற போதிலும், ஏரிகளை தூர்த்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்தது தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான்.
 
இந்த உண்மை உயர் நீதிமன்றத்திற்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், ஆனால், பொதுமக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகும்.
 
சென்னை போன்ற நகரங்களில் சொந்த வீடு என்பது அனைவருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில், அந்தக் கனவை தமிழக ஆட்சியாளர்கள் நிறைவேற்றித் தந்திருக்க வேண்டும்.
 
சென்னை மாநகரில் எங்கெல்லாம் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்; மழை நீர் வடிகால்களுக்கான எல்லைக் கோட்டு வரைபடங்களைத் தயாரித்து அதன்படி வடிகால்களை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
இதை இதுவரை செய்த தவறுகள், விதிமீறல்கள், ஊழல்கள் உள்ளிட்ட பாவங்களை போக்க கிடைத்த வாய்ப்பாக கருத வேண்டும்.
 
அதுமட்டுமின்றி, சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அவற்றை அகற்றவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil