Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

75 சதவீதம் நிதி வழங்க வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்

75 சதவீதம் நிதி வழங்க வேண்டும் : பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்
, திங்கள், 5 அக்டோபர் 2015 (16:35 IST)
அனைவருக்கும் கல்வி திட்டம் இயக்கத்திற்கு 75 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்த கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
 
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 216–வது கூட்டத்தில் 2015–16–ம் ஆண்டுக்கான அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு மொத்தம் ரூ.2329.15 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய – மாநில அரசுகள் 65 மற்றும் 35 சதவீதம் பங்களிப்பை அளிக்கும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
அதன்படி தமிழ்நாட்டுக்கு முதல் தவணையாக ரூ.162.78 கோடி நிதியை கடந்த செப்டம்பர் 1–ந்தேதி வழங்குவதாக தெரிவித்தது. பிறகு செப்டம்பர் 14–ந்தேதி மாநில அரசுகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் மத்திய அரசின் பங்காக 50 சதவீதம் மட்டுமே தர முடியும் என்று நிதி அமைச்சகம் ஒதுக்கி இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டு இருந்தது.
 
கல்வி பெறும் உரிமைச் சட்டம்–2009ன்படி அனைவருக்கும் கல்வி திட்டமானது மிகவும் முக்கியமானதாகும். இந்த திட்டமானது அனைவரும் ஒருங்கிணைந்த தொடக்கக் கல்வியை எட்டு வதற்கான தேசிய இலக்காகும். எனவே அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி வழங்க வேண்டியது அவசியமானதாகும்.
 
2015–16ம் ஆண்டுக்கான வரவு–செலவு திட்டம் வால்யூம் –1ல் இதுபற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு முழுமையான ஆதரவை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று 14–வது நிதிக் கமிஷனின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளது.
 
மத்திய பட்ஜெட் 2015–16ல் இப்படி உறுதிமொழி அளித்து விட்டு தற்போது அனைவருக்கும் கல்வி திட்டத்தில் இருந்து மத்திய அரசு பின் வாங்குவது சரியானதல்ல. எனவே மத்திய அரசின் இந்த முடிவை ஒரு போதும் ஏற்க இயலாது.
 
அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு செலவாகும் தொகையை ஈடுகட்ட மத்திய அரசு பல்வேறு வரிகளிலும் கல்விக்கு என கூடுதல் வரியை வசூல் செய்கிறது. இந்த கூடுதல் வரி வருவாயை மத்திய அரசு, மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொள்வதில்லை.
 
இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு மத்திய அரசு தனது நிதி பங்களிப்பை 65 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைப்பது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க நிதி ஆயோக் அமைப்பில் மாநில முதல் – மந்திரிகளைக் கொண்ட துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த துணைக்குழு விரைவில் தனது பரிந்துரையை அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது உயர்மட்ட ஆய்வில் இருக்கும் நிலையில், மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தன்னிச்சையான முடிவை எடுக்க இயலாது.
 
தமிழ் நாட்டில் ஏழை – எளியவர்களின் குழந்தைகள், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்கள் இலவச கல்வி பெற வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக 2015–16ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு ரூ.20936.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
 
மேலும் தமிழக அரசு மத்திய – மாநில அரசுகளின் 65:35 என்ற பங்களிப்பின் அடிப்படையில் கல்வி பெறும் உரிமை சட்டத்தை மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்த தீவிரமாக உள்ளது. எனவே இந்த 65 மற்றும் 35 சதவீத பங்களிப்பை மாற்ற மாட்டார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
 
14–வது நிதிக்கமிஷன் செய்துள்ள பரிந்துரைகளால் தமிழ்நாட்டுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கான பங்களிப்பு 19.14 சதவீதம் என்ற கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
 
14–வது நிதிக்கமிஷனின் இந்த பரிந்துரைகளால் தமிழ் நாட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி அளவுக்கு ஆண்டுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான நிதி பங்களிப்பை 65:35 என்பதற்கு பதில் 50:50 என்று மாற்றுவது சிக்கலை ஏற்படுத்திவிடும்.
 
அனைவருக்கும் கல்வி திட்டம் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தேசிய முன்னுரிமை திட்டமாகும். எனவே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தாங்கள் இந்த விவகாரத்தில் உடனே நேரில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
மேலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு தற்காலிகமாக குறைந்த பட்சம் 75 சதவீதம் நிதி வழங்க தாங்கள் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், நிதி அமைச்சகத்துக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
அதோடு அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான நிதி பங்களிப்பு 65:35 சதவீதம் என்ற அளவில் தொடர உடனே நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil