Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க கூடாது - ரோசையாவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக

ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க கூடாது - ரோசையாவுக்கு அதிர்ச்சி கொடுத்த  தேமுதிக
, செவ்வாய், 19 மே 2015 (13:12 IST)
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்று தமிழக ஆளுநர் ரோசையாவுக்கு தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில், கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடகா அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், வரும் மே 22 ஆம் தேதி சென்னையில் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில், தமிழக சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டு, மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்க உள்ளதாக தவல் வெளியானது.
 
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ். மணி என்பவர் தமிழக ஆளுநர் ரோசையா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
அதில், ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடகா அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மேலும், இந்த மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து, அதன் தீர்ப்பு வரும் வரை ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது சட்டவிரோத செயலாகும்.
 
எனவே, ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தால், அது சட்டப்படி தவறான செயலாகும் என கூறி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், தமிழக ஆளுநருக்கு தேமுதிக சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் மட்டும் அல்லாது தேசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil