அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குகள் தொடரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் திங்கட்கிழமை தொடங்கிய கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதம் நேற்று தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதாரணி, “தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது உண்மைக்கு மாறாக அவதூறு வழக்குகள் தொடரப்படுகிறது. இதனால், அரசுக்கு பணமும், கால மும் விரயமாகிறது. ஆகவே, இந்த வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “அவதூறு வழக்குகள் தொடர்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளதை உச்ச நீதிமன்றமே உறுதி செய்திருக்கிறது. எனவே, அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது கண்டிப்பாக வழக்கு தொடருவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய விஜயதாரணி, “என் மீதும் ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது. நான் தினமும் பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். அப்படியிருக்கும் போது அரசு வழக்கறிஞர் என்னை கைது செய்ய நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பெற்றுள்ளார்” என்று கூறி சில கருத்துகளை தெரிவித்தார்.
அதனை பேரவைத் தலைவர் ப.தனபால் அவைக் குறிப்பில் இருந்து முழுமையாக நீக்கம் செய்தார்.
இதற்கு விளக்கம் கொடுத்த சட்டத்துறை அமைச்சர், “உங்களைக் கைது செய்ய நீதிமன்றம்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அரசு வழக்கறிஞர் அவரது கடமையைத்தான் செய்தார்” என்று கூறினார்.