Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா சுவாதி கொலை வழக்கு?

சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா சுவாதி கொலை வழக்கு?
, புதன், 31 ஆகஸ்ட் 2016 (05:51 IST)
சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று ராம்குமாரின் தாயார் புஷ்பம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
 

 
கடந்த ஜீன் 24ஆம் தேதி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
 
இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரி வாலிபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது.
 
இந்நிலையில் காவல்துறையினர் உண்மைக் குற்றவாளியை காப்பாற்ற, அப்பாவியான தன் மகனை கைது செய்துள்ளதாகவும், இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் ராம்குமாரின் தாயார் புஷ்பம் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் புஷ்பம் சார்பில் வழக்கறிஞர் ராம்ராஜ் ஆஜராகி, ”இந்தக் கொலை வழக்கை நுங்கம்பாக்கம் காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் முத்துக்குமார், இஸ்மாயில் ஆகியோருக்கு தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர்களை காவல்துறையினர் விசாரிக்கவில்லை.
 
சுவாதியின் உடலில் உள்ள வெட்டுக் காயங்களைப் பார்க்கும் போது ஒருவர் மட்டுமே இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. உண்மை குற்றவாளிகளை பாதுகாக்க காவல்துறையினர் முயற்சிப்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்” என்று வாதிட்டார்.
 
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எமலியாஸ், ”இந்த வழக்கிற்கு பதில் மனுவோ, அறிக்கையோ தாக்கல் செய்ய விரும்பவில்லை. அதற்கு பதில் சுவாதி கொலை வழக்கில் காவல்துறையினர் நடத்திய அனைத்து விசாரணை விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்.
 
அதன்பின்னர் இந்த நீதிமன்றமே முடிவு செய்யட்டும். அதேநேரம் ஒரு குற்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினர், யார் தங்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியாது” என்று வாதிட்டார்.
 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்