Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டைப் பற்றிய சிந்தனை கூட தேசிய கட்சிகளுக்கு இருக்காது - ஜெயலலிதா

தமிழ்நாட்டைப் பற்றிய சிந்தனை கூட தேசிய கட்சிகளுக்கு இருக்காது - ஜெயலலிதா
, செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (09:42 IST)
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தல் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டைப் பற்றிய சிந்தனை கூட தேசிய கட்சிகளுக்கு இருக்காது என்று கூறினார்.

கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் கணபதி ப.ராஜ்குமாரரை ஆதரித்து வ.உ.சி.பூங்கா மைதானத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா கூறியதாவது:-

“இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தங்களுக்குள்ள பலத்தை சோதித்துப் பார்க்கலாம் என்ற அடிப்படையில் தேசிய கட்சிகள் களத்தில் இறங்கி இருக்கின்றன.

சுயேச்சை வேட்பாளர்களுக்கோ அல்லது தேசிய கட்சிகளுக்கோ வாக்களிப்பதனால் உங்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை.

பொதுவாக தேசிய கட்சிகளின் சிந்தனை எல்லாம், டெல்லியை, மத்திய அரசை சுற்றித் தான் இருக்குமே தவிர, தமிழ்நாட்டில் இருக்காது. தமிழ்நாட்டைப் பற்றிய சிந்தனை கூட தேசிய கட்சிகளுக்கு இருக்காது என்கிற போது, கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களைப் பற்றியா தேசிய கட்சிகள் கவலைப்பட போகின்றன?

இந்திய நாட்டை பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யலாம். ஆனால் அவர்களுக்கு தமிழர்களின் உரிமைகளை எப்பாடுபட்டாவது நிலைநாட்ட வேண்டும் என்ற அக்கறை இருக்கிறதா என்றால் நிச்சயமாக அவ்வாறு இல்லை. ஏனென்றால், அவர்கள் பல மாநில மக்களின் வாக்குகளைப் பெற்று மத்தியிலே ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தமிழர் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

உதாரணத்திற்கு காவேரிப் பிரச்சினையை எடுத்துக் கொள்வோம். காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்காணிக்க காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ந்து இருக்கிறோம்.

ஆனால் இந்த பிரச்சினையில் மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு இன்னமும் நியாயம் வழங்கவில்லை. இதற்கு காரணம் என்ன? கர்நாடகாவிலே பாரதீய ஜனதா கட்சிக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், கர்நாடக மக்கள் தங்களுக்கு எதிராக போய்விடுவார்களோ என்ற பயம் பாரதீய ஜனதா கட்சியினரிடம் இருப்பது தான் இதற்குக் காரணம்.

கச்சத்தீவு பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போன்று உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. இந்த பதில் மனுக்களை தற்போதைய மத்திய பாரதீய ஜனதா அரசு இன்னமும் மாற்றவில்லை. இதனை தமிழக பாரதீய ஜனதா கட்சியினரால் தட்டிக் கேட்க முடிந்ததா? இல்லையே!

இதே போல் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நண்பர்களும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என்றால் தமிழக கம்யூனிஸ்டு கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். கேரளா கம்யூனிஸ்டு கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். மத்திய கம்யூனிஸ்டு கட்சியினரோ மவுனமாக இருப்பார்கள்.

தேசிய கட்சிகளால் மாநில பிரச்சினைகளிலேயே முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது என்னும் போது; மாநிலத்தில் உள்ள மாநகராட்சியின் பிரச்சினைக்கு அவர்களால் எப்படி தீர்வு காண முடியும்?

பாரதீய ஜனதா கட்சிக்குள்ளேயே உட்கட்சிப் பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுகிறார்கள். இதை மறைக்க ஆளும் கட்சியின் மீது தமிழக பாரதீய ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

காவேரி நதிநீர்ப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் உச்ச நீதிமன்றம் மூலம் போராடி வெளியிடச் செய்த அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் மூலம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் காட்டிய அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க முந்தைய மத்திய அரசு முயன்ற போது அதனைத் தடுத்து நிறுத்திய அரசு, உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.

இப்படி, எந்த மக்கள் பிரச்சினையானாலும் அதனை எதிர்கொண்டு அதில் வெற்றி காணக் கூடிய ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தான்.

2011 சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாக்குறுதிகளின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் முத்தான திட்டங்களை நாங்கள் உங்களுக்கு அளித்து இருக்கிறோம்.
 

குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில் சுலபமான கடன் வசதி, தொழில்நுட்ப வசதி, எளிய விற்பனை வசதி, கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை நாங்கள் செய்து தந்துள்ளோம். இதன் காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் குறு சிறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் புதிதாக தொழில் தொடங்கியுள்ளன. தொழில் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்கும் மின்சாரத் துறையில் உங்கள் அன்புச் சகோதரியின் அரசு அளப்பரிய சாதனைகளை செய்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,793 மெகாவாட் கூடுதல் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவன்றி நடுத்தர கால அடிப்படையில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. 1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து தற்போது 562 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் மேலும் பல புதிய மின் திட்டங்கள் மூலம் இன்னும் ஒரு சில மாதங்களில் 737 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்க இருக்கிறது.

1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு, இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியைத் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் 463 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கும். இது தவிர, 2014-2015 ஆம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி விரிவாக்கத் திட்டம் நிலை-2ன் இரண்டு அலகுகள் மின் உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன. இவற்றின் மூலம் 230 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்க இருக்கிறது.

இது தவிர 3,330 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு பெறத் தக்க வகையில் நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் 224 மெகாவாட் மின்சாரம் தற்போது பெறப்பட்டு வருகிறது. இது டிசம்பர் மாதத்திற்குள் 1,000 மெகாவாட்டாக உயரும்.

மொத்தத்தில் 2014-2015 ஆம் நிதியாண்டிற்குள் தமிழகத்திற்கு கூடுதலாக 2,430 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இருக்கிறது. இதையும் சேர்த்து கூடுதலாக 5,723 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கச் செய்வதற்கு எனது தலைமையிலான அரசு வழி வகுத்துள்ளது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஏற்படுத்தப்பட்ட மின் வெட்டு சமீப காலம் வரை நீக்கப்படாமல் தொடர்ந்து இருந்த போதும், கோயம்புத்தூர் மாநகரம் தொழில் வளர்ச்சி நிறைந்த மாநகரம் என்பதைக் கருத்தில் கொண்டு, சிறு குறு தொழில்களுக்கு மின்வெட்டு இல்லாமல் நான் பார்த்துக் கொண்டேன்.

எனது தலைமையிலான அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்வெட்டு கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் அறவே நீக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 106 நாட்களில் 97 நாட்கள் மின் தடை ஏதுமின்றி தமிழகம் எங்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தை பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதாவது, 2010-11 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 208 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் எனது ஆட்சியில், நடப்பு ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 267 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

உங்கள் அன்புச் சகோதரியின் அரசின் மூன்று ஆண்டு கால சாதனைகளை மனதில் நிலை நிறுத்தி, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து கோயம்புத்தூர் மாநகராட்சி இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ‘இலையின் தொடர் ஆட்சி கோவை மாநகராட்சியில்’ என்பதை நீங்கள் நிலைநாட்டிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் கணபதி ப.ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவர், கோவை மாநகராட்சியின் வார்டு உறுப்பினராகவும், வடக்கு மண்டலக் குழுத் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

உங்களின் அன்றாடத் தேவைகளையும், உங்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் நன்கு அறிந்தவர். இவர் உங்கள் நலனுக்காக பாடுபடுவார், உங்களையே சுற்றிச் சுற்றி வந்து உங்கள் குறைபாடுகளை அறிந்து, உங்கள் தேவைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவார் என்ற உத்தரவாதத்தை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.

எனவே, உங்கள் பொன்னான வாக்குகளை, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் ‘இரட்டை இலை’ சின்னத்தில் செலுத்தி அன்புச் சகோதரர் கணபதி ப.ராஜ்குமாரை கோவை மாநகர மேயராக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.“  இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil