Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்.ஐ. மகள் காதலனுடன் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்: நகைகளை பெற்றோரிடம் கழற்றி கொடுத்தார்

எஸ்.ஐ. மகள் காதலனுடன் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம்: நகைகளை பெற்றோரிடம் கழற்றி கொடுத்தார்
, வெள்ளி, 11 ஜூலை 2014 (13:33 IST)
சென்னையில் காவல்துறை உதவி ஆய்வாளரின் மகள் காதலனுடன் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார், அங்கு தான் அணிந்திருந்த நகைகளை பெற்றோரிடம் கழற்றி கொடுத்து அனுப்பினார்.

கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் கணேசன், கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் எஸ்ஐயாகப் பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் 23 வயதாகும் பிரமிளா, பம்மல் சீனிவாசா காலனியைச் சேர்ந்த 24 வயதுடைய யாசர் அராபத்தை காதலித்தார்.

இந்நிலையில் அந்த காதல் ஜோடி நேற்று சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அங்கு பிரமிளா கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

"நான் பிஎஸ்சி உளவியல் படித்து வருகிறேன். எனது கணவர் பிஏ சமூகவியல் படித்துள்ளார். நாங்கள் இருவரும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காதலித்தோம். இந்த விஷயத்தை நான் என்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

எனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர். இதனால், கடந்த 7 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி காதலன் யாசர் அராபத்துடன் சென்றேன். இதில், யாருடைய தூண்டுதலும் வற்புறுத்தலும் இல்லை. என்னுடைய சுய நினைவுடனேயே சென்றேன்.

கடந்த 8 ஆம் தேதி ராயபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். எனது தந்தை கணேசன் தற்போது, கொத்தவால் சாவடி காவல் நிலையத்தில் எஸ்ஐயாக உள்ளார்.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எனது நண்பர்களை மிரட்டுகிறார். எனவே, என்னையும் எனது கணவரையும் எனது பெற்றோரின் மிரட்டலில் இருந்தும் அச்சுறுத்தலில் இருந்தும் காப்பாற்ற வேண்டும்."
என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த பல்லாவரம் காவல்துறையினருக்குக் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இதை அறிந்த எஸ்ஐ கணேசன், மனைவி மற்றும் உறவினர்களுடன் அங்கு வந்தார். அவர்கள் பிரமிளாவை தங்களுடன் வருமாறு அழைத்தனர். இருப்பினும் பிரமிளா தந்தையுடன் செல்ல பிடிவாதமாக மறுத்து விட்டார்.

இதைத் தொடர்ந்து பிரமிளா தான் அணிந்திருந்த கம்மல், செயின், 3 மோதிரங்கள் ஆகியவற்ளைக் கழற்றி வக்கீல் மூலம் கொடுத்து அனுப்பினார்.

இந்நிலையில் பிரமிளாவின் விருப்பத்திற்து மாறாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வாலிபரின் உறவினர்கள் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து இது குறித்து விளக்கமறிந்து சென்றனர். பின்னர் காவல்துறையினரின் பாதுகாப்புடன் புதுமணத் தம்பதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil