சட்டசபையில் ஒரு உறுப்பினர் சின்னம்மாவுக்கு வணக்கம் என்கிறாரே அது யார்? என்று சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
சட்டசபையில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தின்போது குன்னம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ‘எங்களை வழி நடத்தும் சின்னம்மாவை வணங்கி நான் பேசுகிறேன் என்றார்.
அப்போது துரைமுருகன் குறுக்கிட்டு, இந்த அவையில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது மறைந்த முதலமைச்சர் பெயரை சொல்லி பேசுவதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இங்கு ஒரு உறுப்பினர் சின்னம்மாவுக்கு வணக்கம் என்கிறாரே அது யார்? என்று சபாநாயகரிடம் கேட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் கூச்சல் போட்டனர். துரைமுருகனின் இந்த கமெண்டால் திமுக உறுப்பினர்கள் சிரிக்கத் தொடங்கினார்கள்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், ”அவர் அவரது கட்சி பொதுச்செயலாளரை குறிப்பிட்டு சொல்கிறார். உங்கள் கட்சி தலைவர் பெயரை நீங்கள் எப்படி கூறுகிறீர்களோ அதே போல் அவரது கட்சி பொதுச்செயலாளர் பெயரை அவர் கூறுகிறார்” என்று குழப்பத்தை தடுத்து நிறுத்தினார்.