Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிடாதது ஏன் ? திக தலைவர் கி.வீரமணி கேள்வி

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிடாதது ஏன் ? திக தலைவர் கி.வீரமணி கேள்வி
, செவ்வாய், 7 ஜூலை 2015 (23:35 IST)
சமூக பொருளாதாரப் புள்ளி விவரங்களை வெளியிட்ட மத்திய அரசு, பெரும்பாலான மக்கள் மிகவும் எதிர்பார்த்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வெளியிடாதது ஏன் என்று  திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆங்கிலேயர் ஆட்சியின்போது (1931) எடுக்கப்பட்டது. அதற்குப் பின்பு இது போன்ற கணக்கெடுப்பு எடுக்கவில்லை.
 
இந்த நிலையில், ஐய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு ஜாதிவாரிக் கணக்கெடுப்பும் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நாடு ‘தழுவிய அளவில் சமூக நீதிச் சிந்தனையாளர்கள் வலியுறுத்தினார்கள்.
 
திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். மாநாடுகளில் தீர்மானங்களையும் நிறைவேற்றி மத்திய அரசின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளோம்.
 
தொடக்கத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பைத் தட்டிக் கழித்த மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தாமதப்படுத்தும் வகையில் இடையில் குறுக்குச் சால் ஒட்டியது. ‘பயோ மெட்ரிக்’ முறையில் இத்தகைய கணக்கெடுப்பை எடுப்பது என்ற அறிவிப்பு வெளிவந்தது.
 
இதனைக் கடுமையாகக் கண்டித்து, அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன். அதில், “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்பது போன்று  ஜாதி வாரிக் கணக்கெடுப்பு பயோமெட்ரிக் (Bio-Metric) என்ற முறையைக் கையாண்டால், அது இந்த யுகத்தில் எளிதில் முடியாது. பல ஆண்டுகள் நீடிக்கும் அபாயம் உண்டு” என்று குறிப்பிட்டு இருந்தோம்.
 
இதனைத் தொடர்ந்து மீண்டும் ஓர் அறிக்கை வெளியிட்டோம். அதில், “மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி விவரம் சேர்க்கப்படுவது அவசர அவசியமாகும். 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்  மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி மக்கள் தொகைக்கான சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்பதால், இது மிக முக்கியம் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் வலியுறுத்தியதோடு, உச்ச நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு சமூக நீதி சம்பந்தமான வழக்குகள் நடைபெறும் போதெல்லாம் நீதிபதிகள் வழக்கமாக எழுப்பும் கேள்விகளாகவும் இவை உள்ளன.
 
எனவே, மத்தியக் கணக்கெடுப்பு (சென்சஸ்) 2011இல் நடப்பதில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுக்க, கட்சித் தலைமைகள், மத்திய அமைச்சரவை அதன் குழு எல்லாம் முடிவு செய்த பின்பு, தாமதம் செய்வது மிகப் பெரிய சமூக அநீதியாகும். 
ஆட்சியில் உள்ள உயர்ஜாதி அதிகார வர்க்கத்தின் ஆளுமை காரணமான சூழ்ச்சியாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்”.
 
பல தடைக் கற்களைத் தாண்டி கடைசி கடைசியாக கடந்த 3.7.2015 அன்று மத்திய நிதி அமைச்சர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். இதில் என்ன கொடுமையென்றால் சமூக  - பொருளாதாரப் புள்ளி விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளதே தவிர - நாடே முக்கியமாக எதிர்பார்த்த - நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஜாதிவாரியான விவரத்தை மட்டும் வெளியிடவில்லை.
 
இது குறித்து, கேட்டால், நாடாளுமன்றத்தில் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவர் பிரனாப் சென் கூறுவது வேடிக்கையானதும் - பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் பொறுப்பற்ற செயலுமாகும்.
 
தாய்ப் பூனைக்கு ஓர் ஓட்டை குட்டிக்கு வேறு ஒரு ஓட்டையா என்று சொல்லுவதுண்டு. அது இந்த இடத்தில் மிகவும் பொருத்தமானதாகும்.
 
ஜாதிவாரி கணக்கெடுப்பை மற்ற புள்ளி விவரத்தோடு வெளியிடாமல், நாடாளுமன்றத்தில் அதுவும் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று சொல்லுவதற்கு விசேடமான காரணம் என்னவோ! அதனை விளக்கி இருக்க வேண்டாமா?
 
ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் 15 சதவீத உயர் ஜாதி பார்ப்பனர்களுக்காக 85 சதவீத மக்களின் விருப்பத்தை, உரிமையைத் தடுப்பதா என்ற வினாவை எழுப்பியுள்ளார்.
 
தொடக்க முதலே பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் சக்திகள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்தே வந்துள்ளன. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கூடவே கூடாது. இந்து அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு என்ற தலைப்பிட்டு ஏடுகளில் செய்திகள் வெளிவந்ததுண்டு.
 
“ஜாதி வாரிக் கணக்கெடுப்பை ஆர்.எஸ்.எஸ். கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தக் கணக்கெடுப்பு நடத்தினால் ஜாதி, இனம், மொழி, மதம் போன்றவற்றால் இந்தியாவில் பிரிவினை எண்ணம் தலை தூக்கும்” என்று கூறியுள்ளனர்.
 
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வெளியில் வந்தால் மக்கள் தொகையில் பெரும் பகுதியாக இருந்தும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர்; அதே நேரத்தில் மக்கள் தொகையில் மூன்று சதவீதம்கூட இல்லாத சிலர் எந்த அளவுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற குட்டு உடைபட்டுப் போகுமே எதிர்ப்புக் குரல் பீறிட்டு எழுமே என்பதாலேயே ஜாதி ஒழிப்பு வீரர்கள் போலப் பாசாங்கு செய்கிறார்கள்.
 
ஒரு சிலரின் இந்த இரட்டை வேடத்தை நம் மக்கள் புரிந்து கொள்ளட்டும்! ஜாதிவாரிக் கணக்கெடுப்பை உடனே வெளியிடாவிட்டால் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்துக் திக போராட்டக் களத்தில் இறங்கத் தயங்காது என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil