Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடி அரசு பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசு: வைகோ

மோடி அரசு பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசு: வைகோ
, புதன், 4 மார்ச் 2015 (06:53 IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசு என்பதை மத்திய நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது என்று கூறியுள்ளார்.
 
இத குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
மோடி அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கையை ஆராய்ந்தால், கடந்த ஆட்சியின் போது சமூக நலத்திட்டங்களுக்கும், விவசாயம் உள்ளிட்ட முக்கியத் துறைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
 
கடந்த 2014-15 ஆம் நிதி ஆண்டில் வேளாண் துறைக்கு ரூ.19,852 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது ரூ.17,004 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நிதி ரூ.12,107 கோடியில் இருந்து பாதியாகக் குறைக்கப்பட்டு, ரூ.6,244 கோடி ஆகியிருக்கிறது.
 
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பட்ஜெட்டில் நீர் ஆதாரத் திட்டங்களுக்கு ரூ.6,009 கோடி அளிக்கப்பட்டது. இதில் தற்போது சுமார் ரூ.2 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது.
 
பெண்கள், குழந்தைகள் நலத் திட்டங்களுக்கு 2014-15 ல் ரூ.18,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு இருந்தது. ஆனால், தற்போது ரூ.10,400 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
 
தாழ்த்தப்பட்டோர் நலன் துணைத் திட்டங்களுக்கான நிதி ரூ.13 ஆயிரம் கோடியும், பழங்குடியினர் நலன் துணைத் திட்டங்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 கோடியும் குறைக்கப்பட்டுள்ளது.
 
கல்வித் துறைக்கான ஒதுக்கீடு ரூ.68,968 கோடி நிதி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3.8 சதவீதம் மட்டுமே ஆகும். அதே சமயம், பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகையை மட்டும் ரூ.5.49 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறது.
 
இதன் மூலம் பெரு நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாளித்துவ அரசு என்பதை மத்திய நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது. இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil