Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலமைச்சர் மக்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு நிதிஷ் குமார் உதாரணம்: அன்புமணி ராமதாஸ்

முதலமைச்சர் மக்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு நிதிஷ் குமார்  உதாரணம்: அன்புமணி ராமதாஸ்
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (14:38 IST)
ஒரு முதலமைச்சர் மக்களை எப்படி நேசிக்க வேண்டும், அவரது தொலை நோக்குப் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு நிதிஷ் குமார் வாழும் உதாரணமாக திகழ்கிறார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
பீகார் மாநில முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ் குமார் தமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
 
பீகார் மாநில மக்கள் நலனில் அக்கறை கொண்டு இம்முடிவை எடுத்த அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட நிதிஷ் குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.
 
அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், நேற்று நடைபெற்ற மதுவிலக்கு நாள் கொண்டாட்டத்தின் போது மக்கள் மனம் குளிரும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
 
மதுவுக்கு எதிராக தமிழகத்தில் நடப்பது போன்ற வலிமையான போராட்டங்கள் பீகார் மாநிலத்தில் நடைபெறவில்லை. ஆனாலும், நிதிஷ் குமார் தாமாக முன்வந்து மதுவிலக்கு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றுகிறார்.
 
ஒரு முதல்வர் மக்களை எப்படி நேசிக்க வேண்டும், அவரது தொலைநோக்குப் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதற்கு நிதிஷ்குமார் வாழும் உதாரணமாக திகழ்கிறார்.
 
அதேநேரத்தில் தமிழகத்தின் நிலையை சற்று கூர்ந்து கவனியுங்கள். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாசால் 34 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட போராட்டம் தமிழ்நாட்டில் இப்போது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
 
4 வயது குழந்தை மது அருந்துவது, பெண்கள் மது அருந்திவிட்டு பொது இடங்களில் தகராறு செய்வது, முதல்முறையாக மது அருந்துபவர்களின் சராசரி வயது முப்பதிலிருந்து 13 ஆக குறைந்தது, மதுவால் ஆண்டுக்கு 2 லட்சம் அப்பாவி மக்கள் உயிரிழப்பது, ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள் உருவாவது, பள்ளியில் பலகைகளை உடைத்து விற்று, அந்த காசில் மது அருந்தும் அவலநிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டது.
 
இதற்கெல்லாம் மேலாக நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்த 11 ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்தி மயங்கி விழுந்தது என மதுவால் ஏற்படும் சீரழிவுகள் தமிழ்நாட்டில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
 
இவ்வளவுக்குப் பிறகும் முழு மதுவிலக்கு கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனையை 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும், எந்த திருநாள் வந்தாலும் அந்த நாளில் சில நூறு கோடிகளுக்கு கூடுதலாக மது விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கும் தமிழக அரசு எப்படி மக்கள் நல அரசாக இருக்க முடியும்?
 
மக்கள் நலனில் சிறிதளவேனும் அக்கறை இருந்தால் தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றும் வகையில் உடனடியாக மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
 
இல்லாவிட்டால், ஏற்கனவே நாங்கள் வாக்குறுதி அளித்தவாறு எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைந்தவுடன் முதல் நாள் முதல் கையெழுத்து முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவதற்கான உத்தரவில் இடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அன்புமணி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil