Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கட்-அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும்: தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்

கட்-அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும்: தொண்டர்களுக்கு திமுக வேண்டுகோள்
, திங்கள், 18 ஜனவரி 2016 (07:39 IST)
பேனர்கள், கட்-அவுட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.


 

 
இது குறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக வினர் கடைப்பிடித்து வரும் விளம்பர முறைகள், போக்குவரத்து நெருக்கடியையும் பாதசாரிகளுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்தி, அரசியல் விளம்பரமே ஆதிக்கச் சக்திகளின் ஆக்கிரமிப்பு தான் - வெற்றுச் செல்வாக்குக்கான அத்துமீறல் மற்றும் மலிவான தந்திரம்தான் என்ற வெறுப்பையும், கோபத்தையும் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.
 
31-12-2015 அன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக வின் பொதுக்குழுவையொட்டி, ஜெயலலிதா வசிக்கும் போயஸ் தோட்ட மாளிகை முதல், திருவான்மியூரில் நிகழ்ச்சி அரங்கம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளின் இரு மருங்கிலும், நடுவிலும் 3 வரிசைகளில் ஜெயலலிதாவுக்காக வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விளம்பர சாதனங்கள், அதிமுக அறிமுகப்படுத்தியுள்ள விளம்பரக் கலாச்சாரத்தின் உச்சம்;
 
எந்த அளவுக்கு இந்த விளம்பரங்கள் பொதுமக்களிடம் முகச் சுளிப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தின என்பதை நடுநிலை நாளேடுகள் படம் பிடித்துக் காட்டியிருந்தன.
 
சாலைகளை மறிக்கும் பேனர்களில் தொடங்கிய அதிமுக வின் விளம்பரக் கலாசாரம் "ஜெயலலிதா ஸ்டிக்கர்" வரை சென்றுவிட்ட கொடுமையைப் பார்த்துக் கண்டிக்காதவர்கள் இல்லை;
 
இந்த நிலை எண்ணிக் கைகொட்டிச் சிரிக்காதார் இல்லை. இனி எந்தக் கட்சியும் அதிமுக வினரின் விளம்பரக் கலாசாரத்தோடு போட்டி போடக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அரசியலில் தலைகுனிவை உண்டாக்கிவிட்டது.
 
அதிமுக விலாவது, இப்படிப்பட்ட கட் - அவுட்களை, அவர்களுடைய தலைவிக்கு மட்டுமே வைப்பதோடு நிறுத்திவிடுகிறார்கள்.
 
ஆனால் நம்முடைய கட்சியிலே (திமுக) உள்ள சிலர், தங்கள் கட்-அவுட்களை, பேனர்களை, ப்ளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதால், அது பொதுமக்களிடம் பெருத்த வெறுப்பைத்தான் ஒட்டு மொத்த கட்சிக்கும் உண்டாக்கி விடும். 
 
அதனால் தான் ஏற்கனவே ஒரு முறை திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருடைய உருவபடங்களைத் தவிர வேறு யாருடைய உருவபடங்களையும்; திமுக நிகழ்ச்சிகளுக்காக விளம்பரச் சாதனங்களை வைக்கும்போது, விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டது.
 
ஆனால் அண்மைக்காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, நாமும் அதுபோல விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால், பொதுமக்களும், பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் நம்மையும் அதிமுக வோடு ஒப்பிட்டுப்பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
 
"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி விடும்" என்ற பழமொழியை யாரும் மறந்து விடக்கூடாது. எனவே அத்தகைய போக்கினை திமுக வினர் உடனடியாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil