Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பக்ரீத் பண்டிகை: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பக்ரீத் பண்டிகை: முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
, ஞாயிறு, 5 அக்டோபர் 2014 (11:28 IST)
இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
 
இது குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–
 
“இறைக் கட்டளையை ஏற்று தன் தனையனையே இறைவனுக்கு அர்ப்பணிக்க துணிந்த இறைத் தூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகையினை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.
 
நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றி பெற எண்ணற்ற தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும்.
 
இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் உறுதி ஏற்போம்.
 
விட்டுக் கொடுத்தலும், ஈகை புரிதலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைவர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.“ இவ்வாறு வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil