நேற்று பாமக சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியை விட்டு நீக்குவதாக பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை செல்லாது என நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடந்த சில காலமாக ஏற்பட்டுள்ள மோதல்களும், முரண்பாடுகளும் கட்சிக்குள்ளே சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் அன்புமணி ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக ராமதாஸும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்கி அறிக்கை விடுவது என பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
நேற்று ராமதாஸ் ஆதரவாளரும், எம் எல் ஏவுமான அருளை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக அன்புமணி அறிக்கை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சில நாட்கள் முன்னர்தான் அன்புமணி ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருந்த ராமதாஸ், அருளை கட்சி பொறுப்பாளராக நியமித்தார்.
அன்புமணியின் அறிக்கை குறித்து பேசிய அருள், அன்புமணிக்கு தன்னை நீக்க அதிகாரம் கிடையாது என்று பேசியிருந்தார். இந்நிலையில், அதை மெய்ப்பிக்கும் விதமாக அருளை கட்சியை விட்டு நீக்க அன்புமணிக்கு அதிகாரம் கிடையாது, தலைவரான எனக்குதான் எல்லா அதிகாரமும் உள்ளது என கூறியுள்ளார் ராமதாஸ்.
அன்புமணியின் டெல்லி விசிட்டிற்கு பிறகு அவரது செயல்பாட்டில் பல மாற்றங்கள் காணப்படுவதாக பாமக வட்டாரத்திற்குள்ளேயே பேச்சு நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் பெரியவர், சின்னவர் இடையேயான இந்த மோதல் கட்சியினரை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
Edit by Prasanth.K