Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அம்பேத்கர்–பெரியார் வாசகர் வட்டம் தடை செய்ய பாஜகவே காரணம்: பெ.மணியரசன்

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அம்பேத்கர்–பெரியார் வாசகர் வட்டம் தடை செய்ய பாஜகவே காரணம்: பெ.மணியரசன்
, புதன், 3 ஜூன் 2015 (12:02 IST)
சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் அனுமதியை நீக்கியுள்ளதற்கு தமிழக பாஜகதான் காரணம் என தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியத் தொழில்நுட்பக் கல்வியகத்தில் (ஐ.ஐ.டி) செயல்பட்டு வந்த, மாணவர்களின் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் அனுமதியை அந்நிறுவனம் நீக்கியுள்ளதற்கு டெல்லி அரசு காரணமில்லை என்று தமிழக பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
 
அண்மையில் வெளி வந்திருக்கும் உண்மைகளின்படி, தமிழக பாஜக  தலைவர்கள்தான், அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தின் அனுமதியை இரத்துச் செய்யுமாறு டெல்லி மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
 
டெல்லி அரசுக்கு இதில் நேரடி பொறுப்பு இல்லை எனச் சொல்லும் பாஜக  தலைவர்கள், தாங்கள் தான் இதற்கு பொறுப்பு என நேரடியாகச் சந்திக்காமல் ஓடி ஒளிந்து கொள்வது ஏன்?
 
இரு நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு அளித்த ஒரு பேட்டியில்,  தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களில் ஒருவரான ராஜா, ஆறு மாதங்களுக்கு முன்பே இந்த அனுமதியை இரத்து செய்திருக்க வேண்டும் என்று கூறினார். இதன் மூலம், ஆறு மாதங்களுக்கு முன்பே அவர் இதற்காக முயன்றிருக்கிறார் - மனித வள மேம்பாட்டுத்துறைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.
 
இதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பில்லை என்கிறார்கள். இந்திய வரலாற்று ஆய்வு மன்றத்திற்கு (ICHR) ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுதர்சன ராவ்வை நரேந்திர மோடிதான் அமர்த்தினார். கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுத் (NCERT) தலைவராக, இந்துத்துவாவாதியான தீனநாத் பத்ராவை அமர்த்தியதும் அதே நரேந்திர மோடிதான்.
 
கல்வியைக் காவிமயமாக்குவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் நரேந்திர மோடியின் உடனடித் திட்டமாக உள்ளது. இந்தப் பின்னணியில்தான், சென்னை ஐ.ஐ.டி.யில் இயங்கிய அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்திற்கான அனுமதி மறுப்பைப் பார்க்க வேண்டும்.
 
மனித சமத்துவத்திற்கான சிந்தனையாளர்களுமான பெரியார் - அம்பேத்கர் பெயரில் செயல்பட்டு வந்த, வாசகர் வட்டத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் தடை செய்திருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
 
அதிமுக அரசு, பெரியாரை அண்ணா திமுகவின் மூலவராகக் காட்டிக் கொண்டு, பெரியாருக்கு நேர்ந்திருக்கும் அவமரியாதையை, அவருடைய கருத்துப் பரவலுக்கு செய்யப்பட்டுள்ள தடையை கண்டிக்காவி்ட்டாலும், அந்தத் தடையை நீக்க வேண்டுமென ஒரு கோரிக்கைக் கூட வைக்காமல் இருப்பது அதிமுகவினுடைய நிலைபாடு, இச்சிக்கலில் பாஜகவின் நிலைப்பாட்டோடு ஒத்துப் போகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.
 
மேலும், இந்தத் தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதித்து, கைது செய்யும் அடக்குமுறையை அதிமுக அரசு ஏவிவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
 
வழக்கமாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களில் கூட, இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து, கைது செய்ய ஆணையிட்டுள்ளது அஇஅதிமுக அரசு.
 
ஐ.ஐ.டி.யில் மீண்டும் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் செயல்பட அனுமதிக்கும்வரை, தமிழகத்தில் அனைத்து முற்போக்கு சக்திகளும் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil