Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1 கோடி பேருக்கு ஸ்மார்ட் செல்பேசிகளை வழங்க ஆளுங்கட்சி திட்டம் - ராமதாஸ் குற்றச்சாட்டு

1 கோடி பேருக்கு ஸ்மார்ட் செல்பேசிகளை வழங்க ஆளுங்கட்சி திட்டம் - ராமதாஸ் குற்றச்சாட்டு
, புதன், 23 மார்ச் 2016 (17:49 IST)
தமிழகத்தில் 1 கோடி பேருக்கு ஸ்மார்ட் செல்பேசிகளை வழங்குவதற்கு ஆளுங்கட்சி திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரியில் நேற்று அதிமுகவினர் நடத்திய நிகழ்ச்சியில் தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளன. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதே போன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.
 
ஆனால், இதை தடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஆதாரங்களை திருத்திக் கொண்டிருக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
 
அதிமுகவினரின் விதிமீறல்கள் சர்ச்சையாகிவிட்ட நிலையில், அவர்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.
 
இந்த விதிமீறல்கள் குறித்து எந்த வழக்கும் தொடரப்படவில்லை. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் தான் என்றில்லாமல் மற்ற மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது.
 
மதுரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 10,000 செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 1 கோடி பேருக்கு ஸ்மார்ட் செல்பேசிகளை வழங்குவதற்கு ஆளுங்கட்சி திட்டமிட்டிருப்பதாக பாமக முதலமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாற்றியுள்ள நிலையில், பிடிபட்ட செல்போன்களுக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
 
தமிழகத்தில் இதுவரை ரூ.11.60 கோடி மதிப்புள்ள பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆளுங்கட்சியினர் கடத்திச் செல்லும் பணத்தை பிடிக்க தேர்தல் அதிகாரிகள் முயற்சி செய்யவில்லை.
 
தமிழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட பிறகும், அதிமுக அரசால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் தான் எல்லா மாவட்டங்களையும் நிர்வகித்து வருகின்றனர்.
 
எனவே, தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்தல் ஆணையம் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும்.
 
அவர்களுக்கு மாற்றாக நேர்மையான அதிகாரிகளை நியமித்து தமிழகத்தில் தேர்தல் நேர்மையாகவும், ஓட்டுக்களை விலைக்கு வாங்காமலும் நடப்பதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil