Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக அரசு லட்சக்கணக்கில் பணம் பெற்று பணியில் அமர்த்த உள்ளது? - விஜயகாந்த் எச்சரிக்கை

அதிமுக அரசு லட்சக்கணக்கில் பணம் பெற்று பணியில் அமர்த்த உள்ளது? - விஜயகாந்த் எச்சரிக்கை
, வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (19:43 IST)
அதிமுக அரசு ஆட்சியை விட்டு வெளியேறும் நேரத்தில் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு, ஆயிரக்கணக்கானோரை பணியில் அமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு தேர்தலிலும் இரண்டு நாட்களுக்கு முன்பு இறுதிக்கட்ட பிரசாரத்தை அரசியல் கட்சிகள் செய்வார்கள். அது மிகவும் பரபரப்பாகவும், வேகமாகவும் இருக்கும். அதை தமிழக மக்கள் ஆண்டாண்டு காலமாக பார்த்துவருகிறார்கள்.
 
ஆனால் ஆளுகின்ற அதிமுக அரசு ஆட்சியை விட்டு வெளியேறும் நேரத்தில் அரசு துறையிலுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புகிறேன் என்கின்ற பெயரில் அவசர அவசரமாக உரிய தேர்வுகளோ, முறையான நேர்காணலோ எதுவுமின்றி, லட்சக்கணக்கில் பணத்தைபெற்றுக்கொண்டு, ஆயிரக்கணக்கானோரை அதிமுக அரசு பணியில் அமர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பணி நியமனத்தை அதிமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். 
 
தற்போது ஆட்சியிலுள்ள அதிமுக அரசுக்கு இன்னும் அதிகபட்சம் ஒருமாத காலம் மட்டுமே அதிகாரம் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வந்த உடனே அதிகாரமற்ற அரசாக அதிமுக அரசு மாறிவிடும்.
 
2011ல் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளில் நேர்மையான முறையில் அரசுப்பணி நியமனங்களை செய்திருந்தால், அது குறித்து யாரும் கேள்வி எழுப்பியிருக்கமாட்டார்கள். ஆனால் தற்போது அதை செய்வதால் பலத்த சந்தேகம் உண்டாகிறது. 
 
உச்சநீதிமன்ற வழக்கை தனக்கு சாதகமாக்கிக் கொள்வதற்காகவே இதுபோன்று பணி நியமன வசூல் வேட்டையில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் ஆட்சியாளர்களின் வாக்குறுதியினை நம்பி வேலைவாய்ப்பற்று வேதனையில் இருக்கின்ற இளைஞர்கள் யாரும் அரசு வேலைக்காக இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொடுத்து ஏமாறவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.
 
அடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகும். அதே சமயத்தில் அதிமுக ஆட்சிக்கு வரவே இயலாது. எனவே ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், அதிமுக அரசின் இறுதி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து நியமனங்களும் உறுதியாக ரத்தாகும். 
 
லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கு “லோக் ஆயுக்தா” தமிழகத்தில் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள இந்த சமயத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
தனக்கு வேண்டியவர்களை காப்பாற்றவே இதுபோன்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், லஞ்சத்தையும், ஊழலையும் இந்த அரசாணை ஊக்குவிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஜெயலலிதா அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள் என்ற அதிமுக எம்.எல்.ஏவின் குற்றச்சாட்டும் இதன் மூலம் உண்மையாகியுள்ளது. 
 
மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்களாக, அவசர அவசரமாக அதிமுகவினரை நியமனம் செய்துள்ளதை உயர்நீதிமன்றம் கண்டித்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 
 
நீதித்துறையில் இனிமேலும் பணிபுரிய தகுதி இல்லையென கட்டாய ஓய்வளிக்கப்பட்ட நீதிபதியை, நியாயமான முறையில், தகுதியான நபர்களை ஆயிரக்கணக்கில் தேர்வு செய்யும் மிக முக்கியமான இடத்தில் அவரை நியமித்துள்ளதே, ஜெயலலிதா அரசின் மிகமோசமான நிர்வாக சீர்கேட்டிற்கும், லஞ்சம், ஊழலுக்கும் சரியான உதாரணமாகும்.
 
எனவே மோசமான முறையில் ஆட்சி நடத்தும் தற்போதைய அதிமுக ஆட்சியை அகற்ற, தமிழக மக்கள் உறுதியோடும், உறுதுணையாகவும் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil