கடந்த சனிக்கிழமை 19-11-16 அன்று தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும், புதுச்சேரி நெல்லிக்குப்பம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
அதில் அதிமுக சார்பாக, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், தஞ்சாவூர் தொகுதியில் ரங்கசாமியும், திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏகே போஸ் அவர்களும் போட்டியிட்டார்கள். அதுபோல, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் ஓம் சக்தி சேகர் போட்டியிட்டார்.
இந்த நான்கு தொகுதிகளுக்கும் பணியாற்ற அமைச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, பாஸ்கரன், ராஜேந்திரபாலாஜி, எம்.பி.க்கள் ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் களத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
இதற்கிடையில், கடந்த இரண்டு மாத காலங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சனிக்கிழமை அன்று [19-11-16] சிறப்பு பொதுப்பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இதனால், பெருமகிழ்ச்சி அடைந்த அதிமுகவினர் அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், கோவில்களில் சிறப்புப் பூஜைகளும் நடத்தினர்.
முதலமைச்சர் ஜெயலலிதா பொதுச்சிறப்பு பிரிவு வார்டுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, தேர்தல் பணிக்குழுவில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர்.
முதல்வர் ஜெயலலிதா பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அதிமுகவினர் நேற்று இரண்டாவது நாளாக கொண்டாடி இனிப்புகள் வழங்கினார். மேலும், அப்போலோ முன்பு 108 தேங்காய்கள் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.