Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக அரசு பரிகாரம் தேடிக்கொள்ள கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது: ராமதாஸ்

அதிமுக அரசு பரிகாரம் தேடிக்கொள்ள கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது: ராமதாஸ்
, திங்கள், 18 ஜனவரி 2016 (12:40 IST)
ஊழலை ஒழிக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
தமிழ்நாட்டின் 14 ஆவது சட்டப் பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஆளுனர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது.
 
பேரவைத் தலைவர் தொடங்கி ஆளுனர் வரை ஜெயலலிதாவை புகழப்போவதைத் தவிர ஆக்கப்பூர்வமாக வேறு எதுவும் இக்கூட்டத்தொடரில் நடைபெறப்போவதில்லை.
 
ஊழலும், மதுவும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களை பாடாய்படுத்தி உருக்குலைத்து விட்டன. சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் தொடங்கி நியாய விலைக் கடைகளுக்கு துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புகளை கொள்முதல் செய்வது, தனியாரிடம் மின்சாரம் வாங்குவது, கிரானைட், ஆற்று மணல் மற்றும் தாதுமணல் குவாரிகளை அனுமதிப்பது வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடியது.
 
அதிமுக அரசின் ஊழல்கள் குறித்து ஆளுனரிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து அடுத்த மாதத்துடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதுவரை அதன் மீது விசாரணை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
 
மற்றொரு பக்கம் மது மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வதன் மூலம் மக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டே இருக்கிறது.
 
5 ஆண்டுகளில் அரசு மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட மது வகைகளின் மதிப்பு சுமார் ரூ.1.90 லட்சம் கோடி ஆகும்.
 
இதில் அரசுக்கு வரி வருவாயாக கிடைத்த ரூ.1.20 லட்சம் கோடி தவிர மீதமுள்ள ரூ.70 ஆயிரம் கோடி அதிமுக வினரும், திமுக வினரும் நடத்தும் மது ஆலைகளுக்குத் தான் வருமானமாக கிடைத்திருக்கிறது.
 
அரசின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு மது விற்பனை மூலம்தான் கிடைக்கிறது என்பது மிகப்பெரிய அவமானமாகும்.
 
ஆனால், இந்த தீமைகளை ஒழிப்பதை விட வளர்ப்பதில்தான் தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. ஊழலை ஒழிப்பதற்காக 20 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
 
தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லோக்ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அத்தகைய லோக்ஆயுக்தா ஏற்படுத்தப்படவில்லை.
 
அதேபோல், கேரளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதலும், பீகாரில் வரும் ஏப்ரல் முதலும் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.
 
எந்த தவறு செய்தவர்களுக்கும் பாவமன்னிப்பு உண்டு என்பதைப் போல ஊழலுக்கும், மதுவுக்கும் துணைபோன அதிமுக அரசு அந்த பாவத்திலிருந்து விடுபட்டு பரிகாரம் தேடிக்கொள்ள கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
 
இந்த இரு தீமைகளையும் நிரந்தரமாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் அந்த பரிகாரம் ஆகும்.
 
அதன்படி, தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்க வேண்டும்;
 
இதே கூட்டத்தொடரில் லோக்ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil