Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.78 கோடி மதிப்பீட்டில் குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு.! தமிழக அரசு அறிவிப்பு..!!

Senthil Velan
வெள்ளி, 14 ஜூன் 2024 (13:16 IST)
மேட்டூர் அணையில் திட்டமிட்டபடி தண்ணீர் திறக்கப்படாத நிலையில்,  ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12- ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டாவில் குறுவை சாகுபடி செய்வதற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.  கடந்த வருடம் ஜூன் 12 ல் குறுவை சாகுபடிக்கு தமிழ்நாடு அரசு தண்ணீர் திறந்துவிட்டாலும் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க மறுத்ததால் மேட்டூரில் தண்ணீர் குறைந்து சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் கருகி நாசமாகின.

இதனிடையே இந்த ஆண்டு மேட்டூரில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், ரூ.78.67 கோடி மதிப்பில் டெல்டா குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் ஒரு லட்சம் ஏக்கருக்கு நிதி வழங்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண் உற்பத்தியை பெருக்கி உழவர்களின் நல்வாழ்வில் வளமை ஏற்படுத்திட பல முன்னோக்கு திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  தமிழ்நாட்டில்,  உணவு உற்பத்தியை பெருக்கவும்,  உழவர் பெருமக்களின் வருமானத்தை அதிகமாக ஈட்டவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தொலைநோக்குத் திட்டங்களை இவ்வரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
 
பருவ மழைகளால் நிரம்பப் பெறும் மேட்டூர் அணை நீர்,  தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகிய காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடிக்காக ஜுன் 12ஆம் நாள் திறந்து விடப்படுவது மரபு.  எதிர்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலந்தாழ்த்தி இருப்பதால் இந்த ஆண்டு 2024 மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால்,  டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்து விட கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.
 
டெல்டா விவசாயிகளை காக்கும் விதமாக ரூ.78.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி தொகுப்பை உழவர் நலன் கருதி கீழ்க்கண்டவாறு வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  1,00,000 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு, 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் ரூ.3.85 கோடி மதிப்பில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும்.  நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு தமிழ்நாடு அரசு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும்.
 
நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கர் பரப்பளவில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 லட்சம் வழங்கப்படும்.  அதோடு,  துத்தநாக சத்து குறைபாடு உள்ள இடங்களில்,  துத்தநாக சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, ஏக்கருக்கு 250 ருபாய் வீதம்,  25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 25 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு மானியமாக 250 ரூபாய் வீதம் 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
 
பயறு வகைப் பயிர்களை 10,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் மற்றும் இலை வழி உரம் தெளிக்கவும்,   ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதியும், பயறுவகைப் பயிர்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கருக்கு நுண்ணூட்டச்சத்து வழங்கிட ரூ.20 லட்சம் நிதியும் வழங்கப்படும்.
 
வேளாண்மை பொறியியல் துறை மூலம் விசை உழுவை, களையெடுக்கும் கருவி, விதை மற்றும் உரமிடும் கருவி, இயந்திரக் கலப்பை, சுழற் கலப்பை, சாகுபடிக் கலப்பை, பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி. ஆளில்லா வானூர்திக் கருவி மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் போன்ற 442 கருவிகள் வழங்கிட மானியமாக ரூ.7 கோடியே 52 லட்சம் நிதி வழங்கப்படும்.
 
டெல்டா மாவட்டங்களில் வேளாண்பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகளை வழங்க 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 

ALSO READ: மாணவர்களுக்கு குட் நியூஸ்..! இந்த மாதத்தில் இருந்து ரூ.1000 உதவி தொகை..!

மேற்கண்டவாறு, அரசு நிதியிலிருந்து நிதி பெற்றும், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்தும், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments