Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் - திருமாவளவன்

எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் -  திருமாவளவன்
, சனி, 30 செப்டம்பர் 2023 (12:44 IST)
எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில்  அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில்,
 
''வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கின்றோம். இதற்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடிய வாச்சாத்தி மக்களுக்கும், அவர்களுக்கு துணையாக இருந்த சிபிஐ எம் கட்சியினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பழங்குடி மக்கள் உள்ளிட்ட எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்குப் புகட்டப்பட்ட பாடம் இந்தத் தீர்ப்பு! 
 
1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் நாளன்று  சந்தன மரக் கடத்தல் காரர்  வீரப்பனை தேடுவதாகச் சொல்லி வாச்சாத்தி  என்ற மலை கிராமத்தில் காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் வனத்துறையினருமாக 250 க்கும் மேற்பட்டவர்கள் சென்று அந்த கிராமத்தையே அடித்து நொறுக்கி சின்னாபின்னப்படுத்தினார்கள். அங்கிருந்த பழங்குடியினப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தார்கள். சுமார் 30 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் 200 க்கும் மேற்பட்டவர்களைக் குற்றவாளிகள் என மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 2011  ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில் தீர்ப்பு நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடுகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது.  215 பேரும் குற்றவாளிகள் என அது உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் அப்போது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகிய மூவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்கள் 18 பேருக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அதில் பாதித் தொகையை குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும், வீடுகளை இழந்த நபர்களுக்குப் பொருத்தமான வேலை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 
இந்த வன்கொடுமைச் சம்பவம் நடைபெற்ற போது முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள் அதிகாரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறினார். குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லசிவன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதன் பின்னரே வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கச்சொல்லி வழக்கு தொடுத்தனர். அதை விசாரித்த உயர்நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசு அப்போது சிபிஐ விசாரணையை எதிர்த்து வாதாடியது. ஆனால் தமிழ்நாடு அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது மட்டுமின்றி காவல்துறையால் வாச்சாத்தி கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.இப்படி கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டத்தின் விளைவாகவே இன்று இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வேலையும் வழங்குவதோடு, தீர்ப்பில் குறிப்பிட்டது போல் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வனத்துறை அலுவலர் ஆகியோர் மீது முறையாக நடவடிக்கை எடுக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர்கள் போராட்டம்.. பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது! அன்புமணி ராமதாஸ்!