Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

64 ஜோடி திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா சொன்ன இட்லி கதை!

64 ஜோடி திருமண நிகழ்ச்சியில் ஜெயலலிதா சொன்ன இட்லி கதை!
, ஞாயிறு, 19 பிப்ரவரி 2012 (14:22 IST)
64 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கணவன் - மனைவி அன்பு குறித்து இட்லி கதை ஒன்றைக்கூறினார்.

"வேலைக்கு சென்ற கணவனை எதிர்பார்த்து மனைவி வீட்டில் காத்திருக்கிறாள். இருக்கின்ற இருவருக்குமாக தயார் செய்திருந்த மாவை வைத்து கணவனுக்காக இட்லி ஊற்றுகிறாள். மொத்தமாக 12 இட்லிகள்தான் அந்த மாவில் இருந்து அவளால் தயாரிக்க முடிந்தது.

சரி, கணவன் சாப்பிட்டது போக மீதம் இருப்பதை நாமும் சாப்பிட்டு இன்றைய பொழுதை கழித்துவிடலாம் என்று எண்ணியவாறே அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில், கணவன் தனது பால்ய சிநேகிதன் ஒருவனை கூடவே அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறான். அப்படி அழைத்துக் கொண்டு வந்தவன் 'எனக்கும் என் நண்பனுக்கும் உணவு எடுத்து வா' என்று கூறினான். பின்னர் இருவரும் சாப்பிட அமர்கிறார்கள். அடுப்பறையில் இருப்பது 12 இட்லிகள்தான் என்பதை எப்படி கணவனுக்கு தெரிவிப்பது என்று குழம்பிய நிலையிலேயே இரண்டு தட்டுகளை எடுத்து வந்து கணவனுக்கும், அவனுடைய நண்பனுக்கும் வைத்து அதில் ஆளுக்கு நாலு இட்லியை வைத்தாள்.

மீதம் இருப்பது நாலு மட்டுமே என மனதுக்குள் படபடப்போடு கணக்கு வேறு போட்டுக்கொள்கிறாள். வைத்த வேகத்தில் நான்கு இட்லிகளையும் கணவன் வேகவேகமாக சாப்பிட்டுவிட பதற்றம் கொண்டவளாய் இரண்டு இட்லியை எடுத்து கணவனுக்கு வைப்பதற்காக குனியும் வேளையில், கணவன் சொன்னான் 'எனக்குப்போதும். நாலு இட்லிக்கு மேலேயா சாப்பிடுவது...?' என்று சொல்ல; அருகில் ரசித்து, ருசித்து இன்னும் சில இட்லிகள் சாப்பிடலாம் என எதிர்பார்த்திருந்த விருந்தாளி நண்பனுக்கோ வெடுக்கென்று ஆனது! அந்த நேரத்தில் இவளோ 'அண்ணா உங்களுக்கு...' என கணவனின் நண்பரை நோக்கிக்கேட்க, 'போதும்... போதும்... நான் எப்போதுமே மூன்று இட்லிதான் சாப்பிடுவேன். இன்று உன் கைப்பக்குவம் நான்கு இட்லிகளை சாப்பிட்டு விட்டேனம்மா...' என்று கூறி எழுந்தான் அந்த விருந்தாளி நண்பன்.

கை கழுவச் செல்லுகையில் மனைவியை கடக்கின்றபோது 'மீதமுள்ள நான்கை நீ சாப்பிட்டுவிடு' என்று கணவன் சொல்ல, தன் இதயத்தில் மட்டுமல்ல தான் சமைத்த பாத்திரத்தில் கூட எத்தனை இட்லிகள் இருக்கின்றன என்பதை பார்க்காமலே, தன் பார்வையைக் கொண்டே கணக்கிட்டுக் கொண்டதோடு; அந்த இக்கட்டில் இருந்தும் அழகாக தன்னை காத்திட்ட தன் கணவனை நினைத்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தாள் அந்தப் பெண்!

இந்தக் கதையில் நாம் பார்த்த தம்பதியினரின் புரிதலைப்போல, இன்று மணம் முடித்திருக்கும் மணமக்களாகிய நீங்களும், ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு எந்நாளும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்".

இதுதான் ஜெயலலிதா கூறிய குட்டிக்கதை!

Share this Story:

Follow Webdunia tamil