Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்- கோர்ட் அனுமதி

Webdunia
வியாழன், 3 மே 2012 (15:50 IST)
கல்விக்கட்டணம் தொடர்பாக 400 பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் அந்த 400 பள்ளிகள் மட்டும் கூடுதல் கடணம் வசூலித்துக் கொள்ளலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக, தமிழக அரசு ஓய்வுப்பெற்ற நீதிபதி ரவிராஜபாண்டியன் தலைமையில் கல்விக்கட்டண நிர்ணய குழுவை நியமித்தது.

இந்த கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தை எதிர்த்து, 400-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தனியார் பள்ளிகள் தாக்கல் செய்த மனுவில், கல்விக்கட்டண நிர்ணய கமிட்டி, நாங்கள் பள்ளியின் தரம், உள்கட்டமைப்பு வசதி, அடிப்படை வசதிகள் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், தனியாக விவாதித்து பொத்தாம் பொதுவாக கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து இருக்கிறது.

பள்ளிகளை பாதிக்கும் இந்த கட்டண பரிந்துரையை ரத்து செய்யவேண்டும் என்று கோரி இருந்தன.

இந்த மனு நீதிபதிகள் ஆர். பானுமதி, விமலா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணை நடந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி பதில் மனுதாக்கல் செய்து வாதிட்டார்.

அவர் தனது வாதத்தில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டுதான் கல்விக் கட்டண குழு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதில் எந்த விதிகளும் மீறப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

பள்ளிகள் தரப்பில் மூத்த வக்கீல்கள் முத்துக்குமாரசாமி, ராகவாச்சாரி, என்.ஆர்.சந்திரன், நடராஜன் ஆகியோர் வாதிட்டனர்.

இரு தரப்பு வாதாங்களும் முடிவுற்ற நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:-

அரசு அமைத்த கமிட்டி நிர்ணயித்த கல்விக்கட்டணம், வழக்கு தொடர்ந்த தனியார் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தாது. அது ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் (2012௧3) இந்த பள்ளிகள் மட்டும் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 10 முதல் 15 சதவிகிதம் வரை தற்காலிகமாக கல்விக் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.

இதற்கிடையே வழக்கு தொடர்ந்த பள்ளிகள், கல்விக் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தகுந்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் முறையிட வேண்டும். கமிட்டியானது இந்த பள்ளிகளை தனித்தனியே அழைத்து, இந்த பள்ளிகளின் நிறை, குறைகளை கேட்டறிந்து புதிய கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

வழக்கு தொடர்ந்த பள்ளிகளில், கிராமங்களில் உள்ள பள்ளிகள் 10 சதவிகிதம் வரையும், மாவட்ட தலைநகரங்கள், மற்றும் நகராட்சிகளில் உள்ள பள்ளிகள் 12 சதவிகிதம் வரையும், மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள பள்ளிகள் 15 சதவிகிதம் வரையிலும் கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.

இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகிதம் இடங்களை வழங்கி, இலவச கல்வி அளிக்க வேண்டும். இதற்கான செலவினங்களை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து அந்தப் பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments