Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2016 தேர்தலில் ஜெயலலிதா தோல்வியை சந்திப்பார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

2016 தேர்தலில் ஜெயலலிதா தோல்வியை சந்திப்பார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (01:22 IST)
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக கடும் போராட்டம் நடத்துவதால், 2016 தேர்தலில் ஜெயலலிதா தோல்வியை சந்திப்பார் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சம் ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு நிலைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
ஆனால், அதிமுக ஆட்சியாளர்களோ இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ தயாராக இல்லை. இந்நிலையில் 27 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான 'ஜேக்டோ" சார்பில் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படாமல் முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.
 
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும், ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய முரன்பாட்டை போக்க வேண்டும், கடந்த 2004 முதல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணி காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தர ஊதியத்துடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும், தொடக்கப் பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும் போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
 
வகுப்பறையில் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தெருக்களில் நின்று போராட வேண்டிய அவலம் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு 'ஜேக்டோ" அமைப்பு தயாராக இருக்கிறது. ஆனால் யாரிடம் பேசுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை.
 
கல்வித்துறை அதிகாரிகள் இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை, எந்த முடிவையும் முதலமைச்சர்தான் எடுக்க வேண்டும் என்று கையை விரிக்கிற அவலமான நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
 
ஆனால், முதலமைச்சரை அமைச்சர்களே பார்க்க முடியவில்லை. இந்நிலையில் அதிகாரிகளோ, ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவான 'ஜேக்டோவோ' முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கு கடுகளவும் வாய்ப்பில்லாத நிலையில் ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 37 ஆயிரம் பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டிய 3 லட்சம் ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பள்ளிகளை புறக்கணித்து போராடுவதை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உள்ளது.
 
ஆனால், ஆசிரியர்கள் வராத நிலையில், பள்ளிகளை சத்துணவு அமைப்பாளர்களை வைத்து நடத்துவது என்கிற முடிவு மிகுந்த கண்டனத்திற்குரியது. இன்று தமிழக அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் 'எஸ்மா" சட்டத்தை நினைவுபடுத்துகிறது.
 
இந்த நிலை நீடிக்குமேயானால் ஒட்டுமொத்த தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தியதைப் போல மீண்டும் அத்தகைய போராட்டத்தை நடத்துகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
 
இப்பிரச்சினையில், உடனே தார்வு காணவில்லை எனில் கடந்த 1996 தேர்தலில் எத்தகைய தோல்வியை ஜெயலலிதா சந்தித்தாரோ, அதற்கு சற்றும் குறையாத படுதோல்வியை 2016 தேர்தலில் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil