Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2011 இறுதியில் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழும்: வைகோ ஆருடம்

2011 இறுதியில் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழும்: வைகோ ஆருடம்
சென்னை , சனி, 1 ஜனவரி 2011 (18:15 IST)
இந்த ஆண்டு இறுதியில் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு கவிழும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:

இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் இந்த ஆண்டு பலத்த திருப்பங்களை வழங்கப்போகும் ஆண்டாக அமையும். 2010 ஆம் ஆண்டு உலக மகா ஊழல் அம்பலமான ஆண்டாக மாறிவிட்டது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

தமிழ்நாட்டிலும் சட்டம் ஒழுங்கு சரியில்லை. வருகிற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் அணியை மக்கள் தோற்கடிப்பார்கள். விலைவாசி உயர்வும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் மத்தியில் நாங்கள் எடுத்து வைப்போம்.

வருகிற தேர்தலில் அதிமுக அணி அமோக வெற்றி பெறும். இந்த ஆண்டு இறுதியில் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழும் என்று கருதுகிறேன்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மக்கள் எதிர்ப்பார்க்க கூடிய கூட்டணியை அமைப்பார்.

எங்களுக்கும், அதிமுகவுக்கும் கூட்டணி நன்றாக உள்ளது.கூட்டணியில் சேரும் கட்சிகள் குறித்து ஜெயலலிதா முடிவு செய்வார். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. மாறுபட்ட கருத்து கொண்ட கட்சிகள் கூட கூட்டணி அமைத்து உள்ளன. எனவே காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் மதிமுகவின் நிலை என்ன என்கிறீர்கள்.

என்னால் யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. காங்கிரசை கண்டித்தும் கூட அ.தி.மு.க. பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை.

நாங்கள் எங்கள் கொள்கையை எப்போதும் சமரசப்படுத்தி கொள்வது இல்லை. அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இன்னும் காலம் இருக்கிறது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் அதற்காக பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil