Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மெளனம் காக்கிறது: விஜயகாந்த் குற்றச்சாட்டு

20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மெளனம் காக்கிறது: விஜயகாந்த் குற்றச்சாட்டு
, வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (11:44 IST)
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மெளனம் காப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர் என்பது உறுதி செய்யும் விதமாகவே உள்ளது. ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் மனசாட்சியோடும், நீதிமன்றத்தின் மாண்பை நிலைநிறுத்தும் பொருட்டும், துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
 
அதன் அடிப்படையில் தற்போது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. தமிழர்களைப் படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்து, சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிமுக அரசு, கடிதம் மட்டும் எழுதிவிட்டு மெளனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
 
 இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகமான உண்மைகளைத் தெரிந்த பொதுமக்கள் நீதிமன்றத்திலோ, தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் உண்மை அறியும் குழுவிடமோ, காவல்துறையிடமோ தெரிவிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படித் தெரிவிப்பவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
 
அதனால், ஆந்திரப் படுகொலை தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் மேற்கண்டவர்களிடம் தகவல் தெரிவிக்க முன் வரவேண்டும். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்போ, இழப்பீட்டுத் தொகையோ நிவாரணமோ கிடைக்க உதவுங்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil