Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாட்டைக் கொன்றதற்காகப் போராடிய பாஜக, 20 தமிழர்களின் படுகொலைக்காக ஏன் போராடவில்லை?: சீமான் கேள்வி

மாட்டைக் கொன்றதற்காகப் போராடிய பாஜக, 20 தமிழர்களின் படுகொலைக்காக ஏன் போராடவில்லை?: சீமான் கேள்வி
, வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (13:13 IST)
ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் செனன்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான் மாட்டைக்கொன்றதற்காகப் போராடிய பாஜக, தமிழர்களின் படுகொலைக்காக ஏன் போராடவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு முறையான நீதி விசாரணை வேண்டியும், ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 2,500 தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,  
வறுமையைத் தொலைக்க தினக்கூலியாக என்ன மரம் வெட்டப்போகிறோம்? என்று கூடத்தெரியாதுபோன அப்பாவித்தமிழர்கள் மீது செம்மரக்கட்டை கடத்தினார்கள் என்று பழிசுமத்தி சுட்டு வீழ்த்தியிருக்கிறது ஆந்திர காவல்துறை.
 
சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழர்கள் கிடந்த இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மரங்களே இல்லையே, அப்புறம் எப்படி செம்மரக்கட்டையை கடத்த முடியும்? எல்லா மரங்களிலும் எண்கள் எழுதப்பட்டிருக்கிறதே, எண் குறித்து வைத்தா மரம் வெட்டுவார்கள்? அவர்களை சிறைப்படுத்தி சித்ரவதை செய்து கொன்றுவிட்டு, செம்மரக்கட்டை கடத்தியதாக நாடகம் ஆடுகிறது ஆந்திர காவல்துறை. 
 
20 பேரை கொன்றால் தமிழகத்தின் அரசுக்கு அழுத்தம் ஏற்படும்; போராட்டம் நடக்கும் என்று தெரியாதா ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு? தெரியும். தமிழகத்திலிருக்கிற அரசு, போராட்டத்தை நடத்தவிடாது என்பதும் தெரியும். மத்தியிலிருக்கிற பாஜக அரசும் ஆந்திர பக்கம்தான் நிற்கிறது; நிற்கும். கர்நாடகாவா? தமிழகமா? என்று வந்தால், கர்நாடகா பக்கம் நிற்கும். ஆந்திராவா? தமிழகமா? என்று வந்தால் ஆந்திரா பக்கம் நிற்கும். ஏனென்றால், கர்நாடகாவில் பாஜக ஆளும் கட்சி; ஆந்திராவில் வளர்ந்துவரும் கட்சி. 
 
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பாஜக, மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்ற சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு தேவை. அதற்காக பாஜக, ஆந்திரா பக்கம் நிற்கிறது. தமிழர்களைக் கொன்றதற்குப்பதிலாக, 20 மாட்டை ஆந்திர அரசு கொன்றிருந்தால் பாஜக போன்ற இந்துத்துவ அமைப்புகள் துடித்து, போராட்டம் நடத்தியிருக்கும். ஆனால், கொல்லப்பட்டது 20 தமிழர்கள். அதனால், போராடவில்லை. மாட்டைக்கொன்றதற்காகப் போராடிய பாஜக, 20 தமிழர்களின் படுகொலைக்காக ஏன் போராடவில்லை? என்று கேட்டால் பதிலில்லை.
 
தகப்பன் இல்லாத வீடு எப்படி தட்டுக்கெட்டுத் தடுமாறுமோ, அப்படி தடுமாறும் தலைவன் இல்லாத நாடும். தமிழகத்திலிருக்கிற ஆட்சியும், அதிகாரமும் தமிழருக்கான அதிகாரமாக இல்லாததால்தான் இந்த சிக்கல். அங்கு மட்டுமா தமிழர்களை சுடுகிறார்கள்? இங்கும்தான் சுடுகிறார்கள். 3  ஆண்டுகளுக்கு முன்பு, பரமக்குடியில் ஐயா இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்போன அண்ணன் ஜான்பாண்டியனை வீட்டுச்சிறையில் வைத்து விடுகிறார்கள். 
 
அப்போது அங்கு கலவரம் ஏற்படுகிறது. கலவரம் ஏற்படும்போது 30 பேர் நிற்கும்போதே கட்டுப்படுத்தாது, 300 பேர் திரள்கிறவரை வளரவிட்டு, 6 பேரை சுட்டுக்கொன்றது தமிழக காவல்துறை. நம்மை கடிக்கவருகிற வெறிநாயைக்கூட நாம் அடிக்கக்கூடாது என்கிறது சட்டம். ஆனால், தமிழர்களை அடித்தால் கேட்க நாதியில்லை. இந்த சம்பவத்திற்கு உரிய நேரத்தில் மோடி வாய் திறப்பார் என்கிறார் அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன். எப்போது இன்னும் 200 பேரை ஆந்திர காவல்துறை சுட்டுவீழ்த்திய பிறகா? 
 
போரூர் கட்டிட விபத்தில் இடிபாடுகளில் பலியானவர்கள் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அதற்கு 20 இலட்சம் நிவாரணம் கொடுக்கப்பட்டபோது, தெலுங்கர்களுக்கு ஏன் நிவாரணம்  கொடுக்கிறீர்கள்? என்றா நாங்கள் கேட்டோம். அன்றாடங்காய்ச்சி, தினக்கூலி செய்கிற சகமனிதன் என்றுதானே நாங்கள் பார்த்தோம்.
 
அந்த மாண்பும், மாந்தநேயமும், பெருந்தன்மையும் எவரிடத்தும் இல்லையே?  எமது காட்டுவளத்தை கொள்ளையடித்தால் சுட்டுத்தள்ளுவோம் என்கிறார் ஆந்திர அமைச்சர். என் நாட்டுக்குள்ளே இருக்கிற வளங்களை தெலுங்கர்கள் சுரண்டிக்கொண்டு செல்கிறார்களே, அவர்களை நாங்கள் என்ன செய்வது?
 
இன்றைக்கு தாலி அகற்றும் விழாவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் துடித்தெழுந்து போராட்டம் நடத்துகின்றன. தாலியின் புனிதம் காக்க துடிக்கிற இந்த அமைப்புகள், ஆந்திர அரசால் 20 தமிழச்சிகளின் தாலி அறுக்கப்பட்டதற்கு வாய்மூடி மெளனமாய் இருப்பது ஏன்? ஈழத்தில் இலட்சக்கணக்கான தமிழச்சிகள் தாலி அறுந்து நிற்கிறார்களே, அதற்காக வாய்திறந்து பேசாதது ஏன்? எம் அக்கா, தங்கைகளின் தாலிகள் மார்வாடி கடையிலே அடகுவைக்கப்படுகிறபோது, அதற்குப் போராடதது ஏன்? அவ்வளவு புனிதமான தாலியை காதலர் தினத்தன்று நாய்க்கும், கழுதைக்கும் கட்டுவது ஏன்? மதுபானக்கடையை திறந்து எண்ணற்ற தமிழச்சிகளின் தாலியை அறுத்திருக்கிறதே அரசு, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? எல்லாவற்றுக்கும் பதில் தமிழர்கள் நாதியவற்றவர்கள் என இவர்கள் கருதுகிறார்கள்.
 
எனவே, மத்திய அரசும், மாநில அரசும் இந்தப்படுகொலையை கடத்திவிட எண்ணக்கூடாது. இதற்கு முறையான நடுவண் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹைதராபாத் நீதிமன்றம், சுட்ட காவல்துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்திருக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், மறுஉடற்கூறு ஆய்வு செய்வதற்கும். உத்தரவிட்டிருக்கிறது. உடற்கூறு ஆய்வு செய்யும்போது ஹைதராபாத்தைச் சார்ந்த உடற்கூறு வல்லுனர்களை மட்டும் பயன்படுத்தாமல், தமிழகத்திலுள்ள வல்லுனர்களையும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த கூட்டத்தில் சீமான் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil