Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20வது இந்திய அணுசக்தி சமூக மாநாடு துவங்கியது

20வது இந்திய அணுசக்தி சமூக மாநாடு துவங்கியது
, திங்கள், 4 ஜனவரி 2010 (17:25 IST)
WD
அணுசக்தி அறிவியல், அது தொடர்பான பொறியியல் மற்றும் தொழிநுட்பத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும், அணுசக்தித் தொடர்பான மற்ற தொழில்நுட்பங்களை இணைக்கவும் செயல்பட்டுவரும் இந்திய அணுசக்தி சமூகத்தின் (Indian Nuclear Society) 20வது ஆண்டு மாநாடு இன்று துவங்கியது.

சென்னை வர்த்தக மையத்தில் இன்று காலை நடந்த விழாவில் இந்தியாவின் அணு சக்தித் துறையின் முன்னோடிகள் குத்து விளக்கேற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தனர்.

‘அணுசக்தித் தொழில்துறையில் பொருட்களும், உற்பத்தியும்’ என்ற நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாடு இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. மாநாட்டை ஒட்டி, அணுசக்தித் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலங்களின் கண்காட்சியும் நடைபெறுகிறது.

மாநாட்டு துவக்க விழாவிற்கு பேராசிரியர் ராமா ராவ் தலைமையேற்றார். கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரும், குறிப்பிடத்தக்க அறிவியலாளருமான முனைவர் பல்தேவ் ராஜ் வரவேற்று, மாநாட்டின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

webdunia
WD
நமது நாட்டின் மூத்த அணுச் சக்தி விஞ்ஞானியான முனைவர் எம்.ஆர். சீனவாசன் (வயது 80) இந்த விழாவில் கெளரவிக்கப்பட்டார். அவருக்கு இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள சிறீகுமார் பானர்ஜி சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்.

பாராட்டை ஏற்றப்பின் உரையாற்றிய எம்.ஆர்.சீனிவாசன், நமது நாட்டின் மின் சக்தித் தேவையை கருத்தில்கொண்டு அணு மின் சக்தி உற்பத்தியை பன்மடங்கு உயர்த்த வேண்டும் என்றும், அணுசக்தி, சூரிய சக்தி ஆகியவற்றின் மூலம் மின் உற்பத்தியை பன்மடங்காக உயர்த்தாமல், நமது நாட்டை முன்னேறிய நாடாக உயர்த்த முடியாது என்று கூறினார்.

அணுசக்தி உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களை ஒன்றிணைக்கும் ஒரு திறன் தொகுப்பை உருவாக்க வேண்டும் என்றும், அதில் இந்திய அணுசக்தி சமூகம் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.

2008ஆம் ஆண்டிற்கான ஹோமி பாபா வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் சைலேந்திர குமார், மருத்துவர் ஆர்.டி. லேலே ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதுகளை இந்திய அணுசக்திச் சமூகத்தின் செயலர் ஆர்.கே. சிங் வழங்கினார்.

பாபா அணுசக்தி மையத்தில் பாதுகாப்பு மதிப்பீட்டுத் துறையில் பணியாற்றிவரும் ரோஹித் ராஸ்தோகி, அணு உலைகளின் உறுதிப்பாடு மதிப்பீடு மற்றும் நிலைத் தன்மைப் பொறியியல் பங்களிப்பிற்காக இந்திய அணுசக்தி சமூகத்தின் பதக்கம் பெற்றார்.

கே.பி. தினேஷ், ராமா மோஹன், உட்கார் சிக்கன்ன கவுண்டர், எம்.வாசுதேவன், இம்ரான் அலி கான், பிரபாத் குமார், ஆர்.எஸ்.யாதவ், சுனில் சபர்வால், அஞ்சன் சாக்கி, பி. சுவாமிநாதன், சத்தீஸ் குப்தா, என்.சாய்பாபா , பிரசன்ன குமார் தத்தா, ஏ.ஆர்.செளந்தரராஜன், பல்லவ பாக்ளா ஆகியோருக்கும், ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷ்ன் லிமி. நிறுவனத்திற்கும் இந்திய அணுசக்தி சமூக பதக்கங்கள் வழங்கப்பட்டது.

webdunia
WD
1958இல் பாபா அணுச் சக்தி மையத்தில் இயங்கும் பயிற்சிப் பள்ளியில் இணைந்த சைலேந்திர குமார், அணு எரிபொருள் வடிவமைத்தல், உதிரி பாகங்கள் வடிவமைத்தல், சோதனை மற்றும் பகுப்பாய்விற்கு ஆய்வகங்கள் அமைத்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியவர். பாபா அணுசக்தி மையத்தின் தேவைக்கேற்ப பணியாளர்களை பயிற்சியளித்து திறன் மேம்பாட்டிற்கு உதவியவர்.

இதுமட்டுமின்றி, நமது நாட்டின் உள்நாட்டுத் தொழில் நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டு நரோராவில் இயங்கிவரும் 220 மெகா வாட் அணு மின் உலை வடிவமைத்தலில் முக்கியப் பங்காற்றியவர் சைலேந்திர குமார் என்று அவருக்கு ஹோமி பாபா வாழ்நாள் சாதனையாளர் விருதிற்காக பாராட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணுசக்தி அடிப்படையிலான மருத்துவமும், மருத்துவ தகவலியலும் இந்தியாவில் பெருக வழிவகுத்தவர் ஆர்.டி. லேலே. 1973ஆம் ஆண்டிலேயே மும்பையிலுள்ள ஜெஸ்லோக் மருத்துவமனையில் அணுசக்தி அடிப்படையிலான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியவர்.

அணுசக்தி மருத்துவத்தின் நெறிகளும் பயன்பாடும், ஆயுர்வேதமும் நவீன மருத்துவமும், சிகிச்சை அறிவியல் மற்றும் சிகிச்சை ஆய்வு, மருத்துவத்தில் கணினி ஆகிய புத்தகங்களை எழுதியவர் என்று அவருக்கு அளிக்கப்பட்ட விருதிற்கான பாராட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றிய இந்திய அணுசக்திக் கழகத்தின் முன்னாள் தலைவரும், விஞ்ஞானியுமான முனைவர் அனில் ககோட்கர், அணு மின் சக்தி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு புதிய பொருட்கள் தேவையாக உள்ளது என்று கூறினார்.

நமது நாட்டின் அணுசக்தி உற்பத்தித் திறனை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு மிக அவசியமானது என்று கூறிய ககோட்கர், அது இலக்கை நோக்கியதாகவும், உள்நாட்டுத் தொழில்நுட்பச் சார்புடையதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

அணுசக்தித் துறையில் மிகக் குறைந்த செலவில் அணு உலைகளைத் தயாரிக்கும் திறனை நாம் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய ககோட்கர், நாம் எதிர்கொண்டுவரும் சவால்களை வெல்வதற்கு நமது பணியும் முன்னேற்றமும் இரட்டிப்பாகவோ அல்லது நான்கு மடங்காகவோ உயர்தல் வேண்டும் என்று கூறினார்.

பல்வேறு மாநிலங்களில் நிறுவப்பட்டுவரும் மேலும் 8 அணு மின் உலைகளால் நமது நாட்டின் அணு மின் சக்தித் திறன் குறுகிய எதிர்காலத்தில் 7,000 மெகா வாட்களாக உயரும் என்றும், மேலும் 4 (அயல்நாடுகளில் உதவியுடன் நிறுவப்படும்) அணு உலைகளின் மூலம் 10,000 மெகா வாட் உற்பத்தித் திறனை எட்டிவிட முடியும் என்றும் கூறிய ககோட்கர், நமது அணு உலைகளை குறைந்தது 90 விழுக்காடு திறனிற்கு இயங்குவது நமது இலக்காயிருக்க வேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil