Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

11 குழந்தைகள் உயிரிழப்புக்கு குறைப் பிரசவமும் குறைவான எடையும்தான் காரணம் - ஓ. பன்னீர்செல்வம்

11 குழந்தைகள் உயிரிழப்புக்கு குறைப் பிரசவமும் குறைவான எடையும்தான் காரணம் - ஓ. பன்னீர்செல்வம்
, புதன், 19 நவம்பர் 2014 (09:54 IST)
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 குழந்தைகள் உயிரிழப்புக்கு, குறைப் பிரசவம், குழந்தைகள் மிகக் குறைவான எடையுடன் பிறந்ததே காரணம் என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
தருமபுரி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தை தீவிரசிகிச்சைப் பிரிவில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பச்சிளம் குழந்தைகளில் 11 பச்சிளம் குழந்தைகள் 14.11.2014 முதல் இன்று வரை இறந்துள்ளனர் என்பதை அறிந்து, இது குறித்த ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளங் குழந்தைகள் இறப்புகள் அனைத்தும் பல்வேறு இயற்கையான காரணங்களால்தான் நிகழ்ந்துள்ளது என்பதும், இதில் சிகிச்சை குறைபாடு எதுவும் இல்லை என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
 
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 14ஆம் தேதியன்று 5 பச்சிளங் குழந்தைகள் இறந்தன என்று தெரிந்தவுடன், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து பச்சிளங் குழந்தைகள் தீவிர கண்காணிப்புப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலர், மருத்துவர் சீனிவாசன் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
அவரது ஆய்விலிருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் எந்தவொரு மருத்துவ ரீதியான குறைபாடுகளும் காணப்படவில்லை. தற்போதும் 73 பச்சிளங் குழந்தைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
மேலும், மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் கீதாலட்சுமி தலைமையில் பச்சிளங் குழந்தை நிபுணர்கள் டாக்டர் நாராயண பாபு, மருத்தவர் சீனிவாசன் மற்றும் மருத்தவர் குமுதா ஆகியோர் தர்மபுரி மருத்துவ மனையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில் 7 குழந்தைகள் இரண்டரை கிலோ எடைக்கு குறைவாக இருந்தன. அதில் 5 பச்சிளம் குழந்தைகள் 1.2 முதல் 1.75 கிலோ எடை மட்டுமே இருந்தன. இந்த குழந்தைகள் குறைப் பிரசவத்தில் பெற்றெடுக்கப்பட்டுள்ளனர்.
 
சராசரியாக 37 வார கர்ப்ப காலத்திற்குப் பதிலாக 28 லிருந்து 34 வாரத்தில் குறைப்பிரசவம் நடைபெற்றுள்ளது. இறந்த 11 பச்சிளம் குழந்தைகளில், 8 குழந்தைகள் இதர மருத்துவ மனைகளில் இருந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
 
கடந்த நான்கு நாட்களில் 11 குழந்தைகளின் இறப்புக்குக் காரணம், மிக இளம் வயது தாய்மார்கள், முந்தைய பிரசவத்திற்கும் தற்போதைய பிரசவத்திற்கும் மிகக் குறைந்த இடைவெளி இருந்தது, குறைப் பிரசவம், பிறந்த குழந்தை மிகக் குறைவான எடை கொண்டிருந்தது ஆகியவையே ஆகும்.
 
தர்மபுரி மாவட்டத்தில் சிசு மரண விகிதம் 19 என உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சராசரியாக மாதமொன்றுக்கு 2050 உயிருள்ள குழந்தைகள் பிறக்கின்றன; 39 சிசு மரணங்கள் ஏற்படுகின்றன.
 
அந்த விகிதாச்சார அடிப்படையிலேயே நடப்பு மாதமும் சிசு இறப்பு ஏற்பட்டிருந்தாலும், நான்கு நாட்களில் சிறிதளவு அதிக இறப்பு ஏற்பட்டுள்ளதால் தொடர் கண்காணிப்புக்காக கீழ்க்காணும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
மருத்துவக் கல்லூரி இயக்குநர் மருத்தவர் கீதாலட்சுமி தலைமையில் மருத்துவ நிபுணர் குழு அனுப்பப்பட்டு தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அனைத்து பச்சிளங் குழந்தைகளுக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிறப்பு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
 
தருமபுரி மாவட்டத்தில் பிரசவம் நடைபெறும் 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடைசி நேரம் வரை காத்திருக்காமல் சிக்கலான பிரசவங்களை உரிய நேரத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கர்ப்பகால பராமரிப்பை கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டு முயற்சியுடன் மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
இணை இயக்குநர் சுகாதாரம், துணை இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மூலம் எடை குறைவான தாய்மார்களை தீவிரமாக கண்காணித்து மேல் சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil