Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"டெசோ-வால் தான் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேறியது"

Webdunia
வெள்ளி, 29 மார்ச் 2013 (17:29 IST)
FILE
ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த பேரவைத் தீர்மானம், டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களையொட்டித்தான் உள்ளது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியதாவது,

கேள்வி :- இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டை வேறு நாட்டில் நடத்துவதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேட்டி அளித்திருக்கிறாரே?

பதில் :- நாம் பாராட்ட வேண்டிய ஒரு அறிவிப்பு இது. ஆனால் அவர் இந்த அறிவிப்பை தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக மட்டுமில்லாமல், அவருடைய கட்சியின் பொது கருத்தாக அமையுமேயானால், அப்போது தான் நம்முடைய பாராட்டு முழுமை பெறும்.

கேள்வி :- ஈழத்தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையிலிருந்து விலகியதோடு, கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவையும் திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் மத்தியில் உள்ள ஆட்சியைக் கவிழ்க்க துணை போக மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு என்றெல்லாம் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனவே; அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில் :- இந்தக் கருத்துக்கள் எல்லாம் வேண்டுமென்றே திரித்து வெளியிடப்படும் விஷமத்தனங்கள். “ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் பதவியில் நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையிலிருந்து தி.மு. கழகம் உடனடியாக விலக முடிவு செய்து” கழகத்தின் சார்பில் 19௩௨013 அன்று அறிவிக்கப்பட்டது.

அப்போதே செய்தியாளர்கள் என்னிடம் “அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு தரப்படுமா?” என்று கேட்டனர். அதற்கு நான் “எதுவும் கிடையாது” என்று தான் பதிலளித்தேன். தொடர்ந்து செய்தியாளர்கள் “நீங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடும் அல்லவா?” என்று கேட்ட நேரத்தில்கூட, “அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல” என்று பதிலளித்திருக்கிறேன்.

ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியினால் தடைசெய்யப்பட்டு, பிறகு நீதி மன்றத்தில் அனுமதி பெற்று சென்னையில் நடைபெற்ற “டெசோ” மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் - ஈழத் தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியே வரும்போது மேற்கொண்ட தீர்மானம் - தொடர்ந்து கழகச் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளான; “இலங்கையில் “காமன்வெல்த்” மாநாட்டினை நடத்தக்கூடாது” என்ற வேண்டுகோளுடன்; இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் - இனப்படுகொலை குறித்து விசாரணை செய்ய நம்பகத் தன்மை வாய்ந்த, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைத்தல் போன்றவைகளை மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.

மேலே சொன்ன இந்தக் கருத்துகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றுக் கொள்ள முன்வராத நிலையில் தான், நாங்கள் அந்தக் கூட்டணியில் இருந்தே விலகி வெளியே வந்து விட்டோம்.

கேள்வி :- இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறதே?

பதில் :- ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த பேரவைத் தீர்மானம், நாங்கள் ஏற்கனவே “டெசோ” மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களையொட்டித்தான் வந்துள்ளது. அதனால் தான் தமிழர் தலைவர் வீரமணியும், திருமாவளவனும் அதை வரவேற்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா அரசால் தடை செய்யப்படவிருந்த “டெசோ” மாநாட்டுத் தீர்மானங்களால் தான் அ.தி.மு.க. அரசு பேரவையிலே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து இப்போது நிறைவேற்றியுள்ளது.

என்று விளக்கமளித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments