Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 வெள்ளை புலிகள் 5 குட்டிகளை ஈன்றது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 வெள்ளை புலிகள் 5 குட்டிகளை ஈன்றது
, புதன், 2 ஏப்ரல் 2014 (11:15 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 வெள்ளை புலிகள் 5 குட்டிகளை ஈன்றது.
White Tigers in Vandalur Zoo
வெள்ளை புலிகளின் தாயகம் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளாகும். வெள்ளை புலிகளும் சாதாரணமாக காடுகளில் காணப்படும் வங்கப்புலி இனமும் ஒரே இனம் தான்.
 
ஆனால் மரபணு நிற குறைபாடு காரணமாக வெள்ளை புலிகள் உருவாகின்றன. இந்திய பூங்காக்களில் சுமார் 100 வெள்ளை புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை பெண் புலியுடன் மஞ்சள் நிற புலி (வங்கப்புலி) கலப்பின சேர்க்கையால் கர்ப்பம் அடைந்த வெள்ளைபுலி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2 அழகான புலி குட்டிகளை ஈன்றது. ஆனால் வெள்ளை பெண் புலிக்கு பிறந்த குட்டிகள் இரண்டும் மஞ்சள் நிறத்தில் இருந்ததால், இந்த குட்டிகளுக்கு தாய் வெள்ளை புலி பால் தராமல் ஒதுக்கி வைத்து இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கா மருத்துவர்கள் முதலில் பிறந்த புலிக்குட்டிகளுக்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாலை உணவாக தந்தனர்.
 
இருந்தாலும் பூங்கா மருத்துவர்கள் தொடர் முயற்சியின் காரணமாக ஒரு வாரத்திற்கு பிறகு தாய் வெள்ளை புலி தனக்கு பிறந்த மஞ்சள் நிற புலிக்குட்டிகளை ஏற்றுக்கொண்டு அதற்கு பால் தந்து வருகிறது.
webdunia
White Tigers
தற்போது இந்த மஞ்சள் நிற புலிக்குட்டிகள் தனது தாய் வெள்ளை புலியுடன் துள்ளிக்குதித்து விளையாடி வருகிறது. தாய் புலியும், மஞ்சள் நிற புலிகுட்டிகளும் ஆரோக்கியத்துடன் உள்ளது.
 
இதற்கு முன்பு பூங்காவில் இதே போல் வெள்ளை புலிக்கும், மஞ்சள் நிற வங்கபுலிக்கு பிறந்த குட்டி மஞ்சள் நிறத்தில் இருந்த காரணத்தினால் தாய் வெள்ளைபுலி அந்த குட்டியை கடித்து குதறியது. இதில் அந்த குட்டி பரிதாபமாக இறந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதே போல பூங்காவில் உள்ள வெள்ளை புலி ஆண் வெள்ளைபுலியுடன் கலப்பின சேர்க்கையில் கர்ப்பம் அடைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 அழகான குட்டிகளை ஈன்றது. தற்போது இந்த புலிக்குட்டிகளும், தாய் புலியும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றன.
 
தற்போது குட்டி ஈன்றுள்ள தாய்க்கு வழக்கமாக தினந்தோறும் கொடுக்கப்படும் 7 கிலோ மாட்டிறைச்சி மற்றும் 150 கிராம் கல்லீரலுடன் சிறப்பு உணவாக 4 கிலோ கோழி இறைச்சியும் வழங்கப்படுகிறது. உயிரியல் பூங்கா வனவிலங்கு மருத்துவர்களால் தாய் மற்றும் குட்டிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த புலிக்குட்டிகளுடன் சேர்த்து பூங்காவில் 14 வெள்ளை புலிகளும், 9 வங்கபுலி (மஞ்சள் நிற) புலிகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது புதியதாக பிறந்துள்ள 5 புலிக்குட்டிகளுக்கு தமிழக முதலமைச்சரும், தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் தலைவருமான ஜெயலலிதா மிக விரைவில் பெயர் வைக்க உள்ளார். இந்த புலிக்குட்டிகளை பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் இன்னும் 3 மாதங்கள் கழித்து பார்க்க அனுமதி வழங்கப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil