பரிசு சீட்டு கிழிந்திருந்ததாக கூறி பரிசு தொகை கொடுக்காத பரிசு சீட்டுதுறை, மனுதாரருக்கு ஒரு லட்சத்துக்கான பரிசு தொகையை வட்டியுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு கிருஷ்ணகுமார் என்பவர் தமிழ்நாடு பரிசு சீட்டை விலைக்கு வாங்கியுள்ளார். அப்போது அவர் வாங்கிய சீட்டுக்கு ரூ.1 லட்சம் பரிசு கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் தமிழ்நாடு பரிசு சீட்டு துறையில் பரிசு தொகை கேட்டு அந்த சீட்டை டெபாசிட் செய்தார். ஆனால் டெபாசிட் செய்த 8 மாதம் கழித்து, பரிசு சீட்டு கிழிந்திருப்பதாகவும், எனவே பரிசு தொகையை பெறமுடியாது என்றும் பரிசு சீட்டு துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து பரிசு சீட்டுதுறை மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.பால்வசந்தகுமார், பரிசு சீட்டை சரிபார்த்து பெற்ற பிறகு, கிழிந்திருப்பதாக கூறுவது சரியல்ல என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
ஆகவே, ரூ.1 லட்சம் பரிசு தொகையை 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 9 சதவீத வட்டியுடன் 4 வாரத்திற்குள் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.