Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூவர் மரண தண்டனையை ரத்து செய்ய சத்யராஜ், மணிவண்ணன்,அமீர் கோரிக்கை

மூவர் மரண தண்டனையை ரத்து செய்ய சத்யராஜ், மணிவண்ணன்,அமீர் கோரிக்கை
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2011 (15:24 IST)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்ததற்குப் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

அவர்களுடன் முத்துக்குமார் ஆவணப்படத்தின் உதவி இயக்குனர் மகேந்திர வர்மா மற்றும் அகிலா, தமிழரசி ஆகியோரும் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினர். பேரறிவாளன், தாயார் அற்புதம் அம்மாளும் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்து இருந்தார். நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் மணிவண்ணன், அமீர் ஆகியோர் இன்று காலையில் உண்ணாவிரதம் இருப்பவர்களை வாழ்த்தினர்.

உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் கூறியதாவது:-

மகாத்மாகாந்தி மற்றும் மனிதநேய ஆர்வலர்கள் அனைவரும் மரண தண்டனை தேவையில்லை என்று கூறியுள்ளனர். இந்த தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்கிற விவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் எந்த குற்றமும் செய்யாமல் தூக்கு மேடை ஏற காத்திருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது நியாயமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

20 ஆண்டுகளாக சிறை வாழ்க்கையை அவர்கள் அனுபவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் அவிழ்க்க முடியாத சில முடிச்சுக்கள் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர். தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் உலக தமிழர்களின் வரவேற்பை பெற்று உள்ளார். அவர் ஒருவரால் மட்டும்தான் 3 பேர் உயிரையும் காப்பாற்ற முடியும் நிலை உள்ளது.

எனவே அவர் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சத்யராஜ் கூறினார்.

டைரக்டர் மணிவண்ணன் பேசியதாவது:-

இன்று நாம் துயரமான ஒரு காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். தூக்கு தண்டனையை எதிர்பார்த்து விடியலுக்காக காத்திருக்கும் 3 தம்பிகளின் உயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 3 பேரும் சிறைக்கு சென்றபோது பள்ளி மாணவர்களாக இருந்தவர்களெல்லாம் சட்ட நிபுணர்களாக மாறி உள்ளனர்.

உண்ணாவிரத மேடைக்கு நான் வந்தவுடன் எதுவும் பேசவேண்டாம் என்றுதான் நினைத்தேன். பயந்துபோய் இதை செல்லவில்லை. அதே நேரத்தில் இன்று மனித நேயத்தை தட்டி எழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 19 வயதில் ஒரு இளைஞர் காதலிக்காகவோ, காதலுக்காகவோ காத்திருப் பான். ஆனால் 3 பேரும் தூக்கு தண்டனைக்காக காத்திருந்தனர். 11 ஆண்டுகளாக கருணை மனுவை நிராகரிக்காமல் தற்போது அதனை நிராகரித்துள்ளது.

அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது சட்ட ரீதியாக வழங்கப்பட்ட தண்டனை அல்ல. அரசியல் ரீதியான படுகொலை. இங்குள்ள தமிழர்கள் சிலரே 3 சகோதரர்களையும் தூக்கில் போடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இறுதிப்போரில் நாம் வெல்வோம். தமிழக முதல்- அமைச்சர் ஒருவரால்தான் 3 பேரின் தண்டனையை குறைக்க முடியும் என்று எல்லோரும் நம்புகிறார்கள்.

எனவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையை கூட்டி மரண தண்டனையில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். நிச்சயம் அதனை அவர் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விரைவில் வேலூர் சிறைச்சாலையில் மாலையுடன் சென்று நாம் வரவேற்போம்.

இவ்வாறு மணிவண்ணன் பேசினார்.

டைரக்டர் அமீர் பேசியதாவது:- 3 உயிர்களை காப்பாற்ற இங்கு 4 உயிர்கள் தங்களை மாய்த்துக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தமிழக மக்கள் மட்டும் இன்னும் விழித்துக்கொள்ளாமலேயே உள்ளனர். 12 நாட்கள் உண்ணாவிரதத்துக்கு பின்னர் இன்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரே வெற்றி பெற்று உள்ளார். ஊழலை விட சக்தி வாய்ந்தது உயிர். அதனை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது.

அதில் இருந்து மீள்வதற்காக 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து திசை திருப்பி உள்ளனர். கருணையே இல்லாத ஒரு ஜனாதிபதியிடம் கருணை மனு சென்றது வேதனை அளிக்கிறது. தமிழக முதல்- அமைச்சரால் மட்டும்தான் 3 பேரின் உயிர்களையும் காப்பாற்ற முடியும் என்று தமிழகம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே அவர் 3 பேர் உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். 100 நாள் சாதனையை இன்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள். 3 பேர் உயிரை காப்பாற்றினால் அது உங்கள் வாழ்நாள் சாதனையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

பகல் 12.30 மணி அளவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேடைக்கு வந்து உண்ணாவிரதம் இருந்தவர்களை வாழ்த்தினார். மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், மாவட்ட தலைவர் தேவராஜ் மற்றும் நூர்முகமது ஆகியோரும் வாழ்த்தி பேசினர்.

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறும்போது, 20 ஆண்டுகளாக எனது மகனின் உயிரை காப்பாற்றுவதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். 3 பேரின் உயிரை காப்பாற்ற ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். உண்ணாவிரத மேடை நுழைவு வாயிலில் 3 தூக்கு கயிறு தொங்க விடப்பட்டு இருந்தது. உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்து போட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil