Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய, மாநில அரசு உறவுகள் மேம்பட மாநில சுயாட்சி கொள்கை அவசியம்: கருணாநிதி

மத்திய, மாநில அரசு உறவுகள் மேம்பட மாநில சுயாட்சி கொள்கை அவசியம்: கருணாநிதி
சென்னை: , செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (19:48 IST)
மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் மேம்பட மாநில சுயாட்சிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய முதல்வர் கருணாநிதி, நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; அனைத்து மொழிகளையும் சமமாக மதிக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் தயாநிதிமாறன் மு.க.அழகிரி, தமிழக அமைச்சர்கள் அன்பழகன், பரிதி இளம்வழுதி, கனிமொழி எம்.பி., மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், திரையுலக பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்புரையாற்றினார். இதைதொடர்ந்து, அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு, அரியப் புகைப்படங்கள், பேச்சுக்கள், செய்திகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள 'அண்ணா 100' என்ற இணையத் தளத்தை, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

அண்ணாவைப் பற்றிய சிறப்பு நூல்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, பரிதி இளம்வழுதி பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் வெள்ளி நாணயத்தை, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட, முதல்வர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் முதல்வர் கருணாநிதி நிறைவுரையாற்றினார். அவர் பேசியதாவது:

இந்த விழாவில் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலிலும் அறிஞர் அண்ணா நாணயமாக திகழ்ந்தார். தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர் திராவிடர் கழகத்தில் இருந்து விலகியபோது, அந்த கழகத்தையே கைப்பற்றும்படி சிலர் அண்ணாவிடம் யோசனை கூறினர்.

ஆனால், தற்போது உள்ள திராவிடர் கழகமும், தான் துவங்கவுள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றிணைந்து, இரட்டைக் குழல் துப்பாக்கிபோல் செயல்படும் என்று அண்ணா கூறினார். அதன்படியே, இன்றும் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழமும் ஒன்றிணைந்து இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அண்ணா கடைபிடித்த அரசியல் நாகரித்தை தி.மு.க.வும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகள் மேம்பட, மாநில சுயாட்சிக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். அதற்கு பிரணாப் முகர்ஜி போன்ற அறிவாற்றல் நிரம்பிய தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசுகளுக்கும் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு மாநிலமும் சம அதிகாரம் பெற்று, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவும; தேசிய ஒருமைப்பாடு உருவாகும்.

நாங்கள் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல; எல்லா மொழிக்கும் நண்பர்கள். எல்லா மொழியையும் நாங்கள் விரும்புகிறோம். ஆனால், எங்கள் மொழிக்கு உரிய இடம் மத்திய அரசில் இருக்க வேண்டும்.

நாங்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் அல்ல; இந்தி மொழிக்கு எதிரான போராட்டங்களின் போது கூட, இந்தி ஒழிக என்று சொல்லவில்லை. கட்டாய இந்தி ஒழிக என்று தான் சொன்னோம். சமத்துவம், சமதர்மம், சகோதரத்துவம் போற்றிட இந்த அண்ணா பிறந்தநாளில் சூளுரைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil