Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்கள் தீர்ப்பை ஏற்று நடக்க வேண்டும் : எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி வே‌ண்டுகோ‌ள்

மக்கள் தீர்ப்பை ஏற்று நடக்க வேண்டும் : எதிர்க்கட்சிகளுக்கு கருணாநிதி வே‌ண்டுகோ‌ள்
சென்னை , வியாழன், 4 ஜூன் 2009 (10:42 IST)
‘ஜனநாயகத்தில் தீர்ப்பு எதுவானாலும் அதை ஏற்று தொடர்ந்து செயல்பட வேண்டும், தவறை திருத்திக் கொண்டு நாட்டு மக்களை வாழவைக்க எதிர்க்கட்சிகள் பாடுபட வேண்டும்’ என்று பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.

முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியின் 86வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், தீவுத்திடலில் நேற்று மாலை நடந்தது. முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி ஏற்புரையாற்றி பேசுகை‌யி‌ல், தேர்தலுக்கு முன் இதே இடத்தில் நடந்த கூட்டத்தில் சோனியாவும் நானும் பேசியபோது தமிழ்நாட்டுக்கு எத்தகைய நன்மை கிடைக்கும் என்றோமோ, என்னென்ன செய்வோம் என்று உறுதி தந்தோமோ அதை நிறைவேற்றும் வகையில் நீங்கள் இந்த அணிக்கு பேராதரவு தந்து நிலையான, நேர்மையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைத்து தந்திருக்கிறீர்கள்.

தேர்தலுக்குப்பின் நாம் 4 இடம் கூட வரமாட்டோம், ஒன்றிரண்டு வருமா என்பது சந்தேகம் என்று தமிழ்நாட்டு பத்திரிகைகள் அல்ல, வடக்கே உள்ள பத்திரிகைகளை எழுதச் செய்து, கருத்துக்கணிப்பு எடுக்கச் செய்து, மக்களை குழப்பி தமிழ்நாட்டில் தி.மு.க அணி வரக்கூடாது என்று அரும்பாடுபட்டு கடைசியாக நாம் ஏமாற்றப் பார்த்தோம், ஏமாந்து விட்டோம் என்று தலையில் கைவைத்துக் கொண்டார்கள். அவர்கள் யார் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

இந்த இயக்கத்தை அழித்து ஒழிக்க திட்டமிட்டு செயல்பட என்ன காரணம்? நான் இழைத்த கொடுமை என்ன? எதுவும் இல்லை. நான் இருப்பதே அவர்கள் சமுதாயத்திற்கு கேடு, பொறுப்புக்கு வருவது அழிவு என்று கருதுகிறார்கள். அது கற்பனையானது. எந்த சமுதாயத்தையும் அழித்து வீழ்த்தும் எண்ணம் தி.மு.க.வுக்கு கிடையாது.

நான் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை முடிந்து படுத்த படுக்கையாக இருந்தபோது, மத்திய அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப் போகிறது என்ற செய்தி வந்ததும் நான், மத்திய அரசு அறிவித்தால் அதற்கு நிகராக தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று செய்தி வெளியிடச் சொன்னேன். மத்திய அரசு அதை வெளியிட்ட பிறகு தேர்தல் முடிந்தபிறகும், பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற பிறகும் வழங்கியிருக்கிறோம்.

தந்த வாக்குறுதி எதுவானாலும் அதை நிச்சயம் இந்த அரசு நிறைவேற்றிக் காட்டும். வெற்றி என்றால் ஆணவமும், தோல்வி என்றால் துவண்டுவிடவும் மாட்டோம். தோற்றால் காரணம் கண்டுபிடிப்பவர்கள் அல்ல நாங்கள். பெட்டியை உடைத்துவிட்டார்கள், இலைக்கு போட்டால் சூரியனுக்கு விழுகிறது என்று கூறி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.

தோற்றால் வெட்கம் காரணமாக எதையாவது சொல்லத் தோன்றும். நீ தோற்கவில்லையா? என்று கேட்கலாம். இதே சென்னையில் நான் துறைமுகத்தில் போட்டியிட்டபோது ராஜிவ் கொல்லப்பட்டதன் விளைவாக தேர்தல் களம் சின்னாபின்னமானது. துறைமுகத்தில் மட்டும் நான் வெற்றிபெற்றேன். அதற்காக, மோசடி நடந்தது என்று கூறியதுண்டா?

உதய சூரியன் சின்னத்தில் முத்திரை குத்தினால் அது இலைச் சின்னத்தில் விழுந்துவிடுகிறது என்று நான் ஒப்பாரி வைத்ததுண்டா? இல்லை. நான் ஜனநாயகவாதியான மக்களாட்சித் தத்துவத்தை நாட்டுக்கு உலகுக்கு மொழிந்த அண்ணாவின் தம்பி என்ற காரணத்தால் மக்களுடைய தீர்ப்பை மகேசன் தீர்ப்பு என்று ஏற்றுக்கொண்டேன்.

அப்படி கண்ணியமான முறையிலேதான் ஜனநாயகத்தை நடத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். ஜனநாயகம், வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் காட்டுத் தீ என்றார் அண்ணா. எனவே காட்டுத் தீ நமக்குத் தேவையில்லை. வீட்டு விளக்குதான் தேவை. அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தில் எந்த தீர்ப்பு கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பகை பாராட்டாமல் வீணான விரோதத்தைக் காட்டாமல் ஒன்றுபட்டு தொடர்ந்து செயல்பட வேண்டும்.

இந்த நேரத்தில், நான் பிறந்தநாள் செய்தியாக உங்களுக்கல்ல, மாற்றுக் கட்சி நண்பர்களுக்கு மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கு நான் விடுக்கின்ற வேண்டுகோள், நாம் நம்முடைய பாதையில் எப்படி நடந்தோம், அதில் என்ன தவறு ஏற்பட்டது, ஒருவேளை தவறை உணர்ந்துகொள்ள முடிந்தால் அதைத் திருத்திக்கொள்வோம், திருத்திக் கொண்டு நல்லமுறையில் நடப்போம், நமக்காக அல்ல, ஒரு கட்சியை வளர்ப்பதற்காக அல்ல, எல்லா கட்சிகளும் சேர்ந்து நாட்டை வளப்படுத்துவதற்காக, நாட்டு மக்களை வாழவைப்பதற்காக என்ற அந்த முடிவை மேற்கொள்வோம் என்பதுதான். அதுதான் எனது பிறந்த நாளில் எல்லா கட்சி நண்பர்களுக்கும் விடுக்கின்ற செய்தி எ‌ன்று கருணா‌நி‌தி பே‌சினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil