Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் முழுமையாக கடையடைப்பு நடந்தது!

போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் முழுமையாக கடையடைப்பு நடந்தது!
, புதன், 4 பிப்ரவரி 2009 (18:20 IST)
சிறிலங்க இராணுவத்தால் ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படுவதை தடுக்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் இன்று நடந்த வேலை நிறுத்தமும், கடையடைப்பும் முழுமையாக நடந்து முடிந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான தி.மு.க., மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. ஆகியவற்றின் எதிர்ப்பையும் தாண்டி, விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. தமிழர் தேசிய இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன இணைந்து ஏற்படுத்திய இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் விடுத்த வேண்டுகோளை அடுத்து நடந்த இன்றைய முழு அடைப்பு முழுமையாக நடந்துள்ளது.

இரயில், பேருந்து போக்குவரத்து தடையின்றி நடந்தும், அரசு அலுவலகங்கள் பாதுகாப்புடன் இயங்கினாலும், சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் கடைகளும், வணிக நிறுவனங்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் உறுதி செய்கின்றன.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சந்தைகள் திறந்திருந்தும் வாங்குவதற்கு மக்கள் வராததால் காய்கறி விலைகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.

சென்னை மாநகரில் ஒரிரு இடங்களில் கடைகள் திறந்திருந்தாலும், பொதுவாக கடையடைப்பு முழுமையாக நடந்துள்ளது. ஈரோடு, சேலம், கோவை, மதுரை, திருச்சி, தஞ்சை, நெல்லை ஆகிய மாநகரங்களிலும் முழு அடைப்பு முழுமையாக நடந்துள்ளது.

தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

இன்றைய முழு அடைப்பின் போது ஒரிரு சம்பவங்களைத் தவிர பொதுவாக அமைதியாக நடந்ததென தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி. ஜெயின் கூறியுள்ளார்.

வேலூரில் தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கல்லெறி சம்பவங்களில் 30 பேருந்துகள் சேதமுற்றதாக காவல்துறை தலைமை இயக்குனர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்த இரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க., இ.க.க., பா.ம.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 1,000 மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்கள் சிவபுண்ணியம், உலகநாதன், பத்மாவதி ஆகியோரும் அடங்குவர்.

புதுவையிலும் முழு அடைப்பு!

புதுவையிலும் ஒரிரு வன்முறை சம்பவங்களைத் தவிர, முழு அடைப்பு முழுமையாக நடந்து முடிந்துள்ளது. தமிழக, புதுவை அரசு பேருந்து சேவைகள் தவிர, புதுவையில் முழுமையாக கடையடைப்பு நிகழ்ந்துள்ளது.

புதுவையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் இன்று குறைந்த அளவிற்கே ஊழியர்கள் பணிக்கு வந்ததாக செய்திகள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil