Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போக்குவரத்துத்துறை தனியார் மயமாகாது: அமைச்சர் நேரு உறுதி

போக்குவரத்துத்துறை தனியார் மயமாகாது: அமைச்சர் நேரு உறுதி
, புதன், 24 ஜூன் 2009 (16:25 IST)
அரசு போக்குவரத்துத் துறை தனியார் மயமாகாது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் உறுதியளித்தார்.

தமிழக சட்டசபையில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடந்தது. முடிவில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:

தமிழகத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் பேருந்தில் 1 லட்சத்து 70 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். ஆனால் தற்போது பயணம் செய்வோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 97 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆட்சியில் 156 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்த ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 1,476 புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. மேலும், 2,386 வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளது. புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனினும், பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் பஸ் கட்டணம் குறைக்கப்பட்டதாக உறுப்பினர்கள் பலர் புகார் தெரிவித்தனர். பேருந்து கட்டணத்தில் தற்காலிக கட்டண ஏற்ற, இயக்கம் என்பது வழக்கமான ஒன்றுதான். அந்தந்த போக்குவரத்து மண்டல ஆணையர்கள், அந்த மண்டலத்தில் வருமானம் அல்லது நஷ்டம் ஆகியவற்றை பொருத்து, இந்த தற்காலிக பேருந்து கட்டண ஏற்ற, இறக்கத்தை செய்வதுண்டு.

போக்குவரத்து துறையில் பேருந்து கட்டணம், 38 காசிலிருந்து 32 காசுகளாக குறைக்கப்பட்டு, வசூலிக்கப்படுகிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்துத் துறையில் தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் ஸ்மார்ட் கார்டுகள் பெற்றுள்ளனர். இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் கொண்டுவரப்படும்.

ஆலங்குடி, காட்பாடி மற்றும் சேத்துப்பட்டு போன்ற ஊர்களில் பேருந்து பணிமலைகள் (டெப்போ) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துத் துறையில் நிதிப்பற்றாக்குறை நிலவுவதால் அந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. அந்தந்த தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி நிதியிலிருந்து நிதி கொடுத்து உதவினால், போக்குவரத்துத் துறையும் நிதி ஒதுக்கி, புதிய டெப்போக்கள் அமைக்க முயற்சிகளை மேற்கொள்ளும்.

பல பேருந்து டெப்போக்களில் வாசிங்மெஷின் மூலம் பேருந்துகள் சுத்தம் செய்யப்படுகின்றன. விரைவில் அனைத்து டெப்போக்களிலும் வாசிங்மெஷின் மூலம் சுத்தம் செய்யும் வச்தி விரைவில் கொண்டுவரப்படும்.

புதிய பேருந்துகள் இயக்கியது, சொகுசு பேருந்துகள், தாழ்தள பேருந்துகள் இயக்குவது, வேலைவாய்ப்பை அதிகரித்தது, காலி பணியிடங்களை நிரப்பியது போன்ற பல்வேறு காரணங்களில் போக்குவரத்துத் துறை ரூ.791 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது.

எனினும், முந்தைய ஆட்சியில் போக்குவரத்துக் கழகம் செயல்பட்ட முறை, வரவு செலவுகள் போன்றவற்றை ஒப்பிடுகையில், தற்போது போக்குவரத்துத் துறை 18 சதவீதம் வளர்ச்சிப் பெற்றுள்ளது.

எனவே, எந்த காரணம் கொண்டும் அரசு போக்குவரத்துத் துறை தனியார் மயமாக்கப்படாது. அதன் பராமரிப்பு பணிகளும் தனியார் மயமாகாது. இவ்வாறு நேரு பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil