பெற்றோரை இழ‌ந்த மகனுக்கு ரூ.30 லட்சம் நஷ்டஈடு - மாநகரா‌ட்‌சி‌க்கு ஐகோர்ட்டு உத்தரவு

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2012 (10:51 IST)
சென்னையில் கார் மீது மரம் விழுந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த மகனுக்கு சென்னை மாநகராட்சி ரூ.30 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட்டது.

செ‌ன்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த கே.கார்த்திக் எ‌ன்பவ‌ர் தாக்கல் செய்த மனுவில ், எனது தந்தை கிருஷ்ணமூர்த்தி. இவர் என்ஜினீயரிங் மற்றும் பி.எச்டி. பட்டம் பெற்றவர். நெடுஞ்சாலைத் துறையில் உதவி இயக்குனராக பணியாற்றினார். எனது தாயார் சித்ரா தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.

கடந்த 12.10.05 அன்று புரசைவாக்கத்தில் துணிகள் வாங்கிக் கொண்டு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தோம். டாக்டர் அழகப்பா சாலைக்கு வந்தபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மரம் ஒன்று காரின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் கார் நசுங்கியதால், அதில் சிக்கி எனது பெற்றோர் 2 பேருமே அங்கேயே உயிரிழந்தனர். நான் காயங்களுடன் உயிர் தப்பினேன். அப்போது நான் முகப்பேரில் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த சிறு வயதில் பெற்றோரை சமுகப் பாதுகாப்பு, தரமான கல்வி போன்ற பல அம்சங்களை இழந்துவிட்டேன். சாலை ஓரத்தில் நிற்கும் மரங்களை சென்னை மாநகராட்சிதான் பராமரிக்க வேண்டும். கீழே சாயும் நிலையில் நின்று கொண்டிருந்த அந்த பெரிய மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி இருந்தால், அந்த துயர சம்பவமும், எனக்கு இழப்பும் நேரிட்டு இருக்காது.

எனவே எனது தந்தையின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததற்காக ரூ.15 லட்சமும், எனது தாயார் சாவதற்கு காரணமாக இருந்ததற்காக ரூ.7 லட்சமும் சேர்த்து எனக்கு ரூ.22 லட்சத்தை நஷ்டஈடாக சென்னை மாநகராட்சி வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த 16.10.06 அன்று கமிஷனருக்கு மனு கொடுத்தேன். அதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே எனது மனுவை ஏற்றுக்கொண்டு, நஷ்ட ஈட்டை வழங்குவதற்கு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றி‌யிரு‌ந்தா‌‌ர்.

செ‌ன்னை மாநகரா‌ட்‌‌சி தர‌ப்‌பி‌ல் வா‌திடுகை‌யி‌ல், இயற்கையின் காரணமாகவே மரம் விழுந்தது. அதில் விபத்து ஏற்பட்டதால் மனுதாரரின் பெற்றோர் உயிரிழந்தனர். இதற்காக மாநகராட்சியிடம் நஷ்டஈடு கோர முடியாது என்று வாதிடப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் நவீன்குமார் மூர்த்தி வா‌திடுகை‌யி‌ல், மரம் விழுந்ததால்தான் உயிரிழப்பு நேரிட்டுள்ளது. கீழே விழக்கூடிய நிலையில் உள்ள சாலையோர மரங்களை பராமரிக்கும் பொறுப்பை சரியாக செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. அப்படிப்பட்ட மரங்களை கண்டறிந்து அவற்றை உடனே வெட்டி அப்புறப்படுத்த வேண்டியது மாநகராட்சியின் கடமை. அந்தக் கடமையை செய்யத் தவறியதால்தான் அசம்பாவிதம் ஏற்பட்டது. எனவே உயிரிழப்புக்கு மாநகராட்சி நிர்வாகம்தான் பொறுப்பேற்று நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தர‌வி‌ல், சாலையோர மரங்கள் பற்றி கணக்கெடுத்து, பராமரிக்கும் பட்சத்தில் இதுபோன்ற பழைய மரங்களின் நிலையை அரசு அதிகாரிகள் கண்டறிய முடியும். ஆனால் அதை செய்யாமல் அரசு அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்த உயிரிழப்புக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

அரசு அதிகாரிகளின் அலட்சியம் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள் நஷ்டஈடு பெறுவதற்கு உரிமை உள்ளது. இதை பல வழக்குகளில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கிலும் மனுதாரருக்கு நஷ்டயீட்டை சென்னை மாநகராட்சிதான் வழங்க வேண்டும்.

மனுதாரரின் பெற்றோர் உயிருடன் இருந்திருந்தால் அவர்களின் பணியின் மூலம் தங்கள் குடும்பத்துக்காக குறைந்தபட்சம் ரூ.23 லட்சத்து 76 ஆயிரம் வருவாய் ஈட்டியிருப்பார்கள். அதனடிப்படையில் மனுதாரர் ரூ.22 லட்சம் இழப்பீடு கேட்டு மாநகராட்சிக்கு 2006ஆம் ஆண்டு மனு கொடுத்துள்ளார். எனவே அந்தத் தொகைக்கான 6 சதவீத வட்டி 7.26 லட்சம் ஆகியவற்றை சேர்த்தால் ரூ.29 லட்சத்து 26 ஆயிரம் வருகிறது. அந்தத் தொகையை 4 வாரங்களுக்குள் மனுதாரருக்கு மாநகராட்சி வழங்க வேண்டும் எ‌ன்று ‌நீ‌திப‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

2 இரட்டை இலைக்கு 1 தாமரை. தொகுதி பங்கீட்டில் அண்ணாமலையின் ஆதிக்கம்..!

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

Show comments