Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாட்னா குண்டுவெடிப்புகள் பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம்: நாம் தமிழர் கட்சி

பாட்னா குண்டுவெடிப்புகள் பாதுகாப்பு அக்கறையின்மையே காரணம்: நாம் தமிழர் கட்சி
, திங்கள், 28 அக்டோபர் 2013 (12:27 IST)
FILE
பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டிருப்பதும், 80க்கும் அதிகமானோர் படுகாயமுற்றிருப்பதும் நமது நாடு பாதுகாப்பற்ற ஒன்றாக ஆகிக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. என்று நாம் தமிழர் கட்சி அறிக்கை ஒன்றில் சாடியுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

பொதுவாகவே, பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தலைவர் எவராயினும், அவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு முன்னர் அந்நிகழ்விடத்தில் கடும் சோதனை நடத்தப்படும். ஆனால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசிய அந்த கூட்டம் நடந்த மைதானத்தில் அப்படியொரு சோதனை நடத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அதுமட்டுமின்றி, கூட்டத்தில் தலைவர்கள் பேச்சை கேட்கவரும் பொதுமக்களோடு கலந்து, இப்படி நாசவேலை செய்பவர்களும் ஊடுறுவும் வாய்ப்பு உள்ளதைத் தடுக்க, மைதானத்தில் நுழைவு வாயில்களில் கடும் சோதனை நடத்தப்படுவதும் உண்டு. அப்படிப்பட்ட சோதனைகள் கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு வரும் இரசிகர்களிடம் கூட செய்யப்படுகிறது. அவ்வாறிருக்கு இப்படிப்ட்ட பாதுகாப்பு சோதனைகள் நரேந்திர மோடி கலந்துகொண்ட கூட்டத்திற்கு செய்யப்பட்டதா என்பதை நாட்டிற்கு பீகார், மத்திய அரசுகள் தெரிவித்திடல் வேண்டும்.

தீவிரவாதிகள்...

எங்கே, எப்போது தாக்குவார்கள் என்பதை கண்டறிய முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் பல முறை கூறியுள்ளது. அப்படியிருக்க, பொது மக்களின் பாதுகாப்பு கருதி செய்ய வேண்டிய, மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு சோதனைகள் செய்யப்பட்டதா என்பதை தெரிவிப்பது முக்கியமாகும்.

நமது நாட்டில் ஆட்சியில் உள்ளவர்களும், ஆட்சிக்கு வரும் தேர்தல் பலம் உள்ள பெரிய கட்சிகளின் தலைவர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழலில் இந்த நாட்டிற்கு எதிரான, அரசுக்கு எதிரான கொள்கை கொண்டவர்களின் இலக்காக பொதுமக்களே ஆகின்றனர். இதுதான் 1992ம் ஆண்டிற்குப் பிறகு நடந்து வருகிறது. பொதுமக்கள் பெருமளவிற்கு கூடும் சந்தை பகுதிகள், கோயில்கள், மசூதிகள், இரயில் நிலையங்கள், இரயில்கள், பேருந்துகள் ஆகியனவே இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு இலக்காகின்றன. இப்படிப்பட்ட பயங்கரவாத, தீவிரவாத தாக்குதல்களில் இந்த 20 ஆண்டுகளில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயினும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. தாக்குதல் நடத்துவோரின் சாதாரண இலக்காக

இந்த நாட்டு மக்கள் ஆகிவிடுகின்றனர். ஆனால், இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்து முடிந்த பின்னர் ஊடகங்களில் பேசும் ஆட்சியாளர்களும், தலைவர்களும் ஆறுதலுக்கு சொல்லும் வார்த்தைகள் வினோதமாகயிருக்கின்றன. இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம் என்பதும், இதனால் இந்திய மக்களை அச்சுறுத்திவிட முடியாது என்றும் இவர்கள் கூறுவதன் பொருள் புரியவில்லை. தாக்குதல்களை நடத்தியவர்களை கண்டிப்பது என்றால் என்ற பொருள்? உங்களின் கண்டனங்கள் அவர்கை மாற்றிவிடப் போகிறதா? இந்திய மக்களை அச்சுறுத்திவிட முடியாது என்று பேசுகிறீர்களே, அப்படியானால் இத்தனை குண்டு வெடிப்புக்களுக்குப் பிறகும் நமது மக்கள் அச்சமின்றி வாழ்கிறார்கள் என்று கூறுகிறீர்களா? பலத்த பாதுகாப்பிற்கு உள்ளே நின்றுகொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் அச்சப்பட மாட்டார்கள் என்று பேசுகிறீர்களே, என்ன அதற்குப் பொருள்?

இது முழுக்க முழுக்க ஆட்சியாளர்களின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல், உங்களின் பாதுகாப்பை மட்டும் பலமாக உறுதி செய்துகொள்கிறீர்களே என்று மக்கள் கேட்கும் காலம் வரும், வர வேண்டும். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை முன்னுரிமையாகக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும். வெற்று வார்த்தைகளும், கண்டனங்களும், அனுதாப செய்திகளும் பாதுகாப்பை தந்துவிடாது.

Share this Story:

Follow Webdunia tamil