Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
, வியாழன், 25 ஜூலை 2013 (19:13 IST)
நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 70 அடியை தாண்டியது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சகதிகள் 15 அடி கழித்து மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். மொத்த நீர் கொள்ளவு 32 டி.எம்.சி. ஆகும்.

இந்த அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறந்துவிடும் தண்ணீரால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் பாசனப்பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகிறது.

கடந்த மாதம் இந்த அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து 29 அடியை தொட்டது. இதனால் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் மீன் பிடிப்பு தொழில் மற்றும் நீர்மின்தி உற்பத்தி உள்ளிட்டவைகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதத்தின் இறுதியில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் அணையின் நீர்வள ஆதாரமான பவானி ஆறு மற்றும் மோயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 60 அடியை தொட்டது.

இதனால் பவானிசாகர் அணையில் இருந்து தமிழக முதல்வர் உத்திரவின் பேரில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்துவருவதால் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது. நேற்று காலை எட்டு மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.28 அடியாக உயர்ந்தது. அணையில் 11.76 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. பவானி ஆற்றில் பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி திறக்கப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் குடிநீருக்காக வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil