Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த 3 வழிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு

பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த 3 வழிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: , செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (19:57 IST)
பன்றிக்காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த மூன்று புதிய வகை முறைகள் கையாளப்படும் என்று தமிழக அரசின் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகைத் தகவல் அலுவலகம் சார்பில் பத்திரிகையாளர்களுக்கான எச்1என்1 இன்புளுயன்சா பற்றிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் ஆரம்ப சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் எஸ்.இளங்கோவன் கலந்துக்கொண்டு பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் மூன்று வகைகள் குறித்து விளக்கினார். அதன் விபரம்:

வகை 1 :

* சாதாரண காய்ச்சலுடன் கூடிய இருமல் மற்றும் தொண்டைவலி காணப்படும் நோயாளிகள். இவர்களுக்கு உடம்பு வலி, தலை வலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

* இந்த நோயாளிகளுக்கு Oseltamavir / டாமிஃபுளு மருந்து தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

* ஆய்வக பரிசோதனை தேவையில்லை

*இந்நோயாளிகள் வீட்டில் ஓய்வெடுத்து கொள்ளும்படியும் மற்ற நபர்களுடன் தொடர்பினை குறைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* இருமல், தும்மல் இருந்தால் கைக்குட்டைகளைப் பயன்படுத்திட வேண்டும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

வகை 2:

* வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் கடுமையான காய்ச்சல் மற்றும் கடுமையான தொண்டைவலி இருக்கும் நிலை

* வகை ஒன்றில் காணப்படும் நோய் அறிகுறிகளுடன் காணும் நபர் ஐந்து வயதுக்கு உரிய குழந்தையாகவோ, கர்ப்பிணியாகவோ, 65 வயதிற்கு மேல் உள்ள முதியவராகவோ அல்லது நுரையீரல், இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நீரழிவு, நரம்பு, ரத்தம் மற்றும் எச்ஐவி/எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ டாமி ஃபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆய்வகப் பரிசோதனை தேவையில்லை.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்

வகை 3 :

மேற்கூறிய வகை 1 மற்றும் வகை 2க்கான அறிகுறிகளுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம், ரத்தத்துடன் கலந்த சளி, நீல நிறமாகும் நகங்கள், குழந்தைகளைப் பொருத்தவரை உணவு அருந்தாத நிலை ஆகிய சூழ்நிலைகளில்

* எச்1 என்1 ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்திட வேண்டும்

*மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும்

* டாமி ஃபுளு மருந்து கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சாதாரண ஜலதோஷம் உள்ளவர்கள் எச்1 என்1 பரிசோதனை செய்ய தேவை இல்லை என்றும், மருத்துவர் ஆலோசனையின் பேரிலேயே பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என்றும், தேவையற்ற நிலையில் டாமி ஃபுளு மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்றும் அவர் மேலும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil