Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: ஜெயலலிதா எதிர்ப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: ஜெயலலிதா எதிர்ப்பு
சென்னை , புதன், 1 ஜூலை 2009 (16:14 IST)
நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல வாக்குறுதிகளை செயல்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு முனைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 100 நாட்களுக்கான செயல்திட்டம் என்று அஇஅதிமுக முதன்முதலில் அறிமுகப்படுத்திய கொள்கையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றிக் கொண்டது போல் தோன்றுகிறது.

இதேபோன்று, பலதரப்பட்ட செயல்களுக்கு பயன்படக்கூடிய தேசிய குடிமகன்/குடிமகள் அடையாள அட்டை குறித்து சிந்தித்த ஒரே கட்சி அதிமுக. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்திய அரசு முடிவு செய்திருப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொலைநோக்கு பார்வைக்கும், தேசிய அணுகு முறைக்கும் கிடைத்த ஒரு அங்கீகாரம்.

நமது நாட்டின் கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில் பேசுவதும், நினைப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பினும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு திரும்ப பெறப்படும் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாடு முழுவதும் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருப்பது தன்னிச்சையானதாகவும், தெளிவற்ற சிந்தனை உடையதாகவும் தோன்றுகிறது.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் இதுபோன்ற முடிவை மத்திய அரசு எடுப்பது, அதன் ஒருதலைப்பட்சத்தன்மையை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாநில சுயாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய களங்கமாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும் பொதுவான கல்விமுறை என்பது வரவேற்கத்தக்கது என்றாலும், நாடு முழுவதும் 12ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு என்ற தன்னிச்சையான அறிவிப்பு, அதன் விளைவுகள் குறித்து நன்கு சிந்திக்கப்படவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

உதாரணமாக, தமிழகம் போன்ற தென்மாநிலங்களில் உள்ள ஒரு மாணவருக்கான ஹிந்தி வினாத்தாளும், ஹிந்தியை தாய்மொழியாக அல்லது பொதுமொழியாகக் கொண்டு படிக்கும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவரின் வினாத்தாளும் எப்படி ஒரேவிதமாக இருக்க முடியும்?

அமைச்சர் கபில் சிபலின் இந்த அறிவிப்பு குறித்து மாநில சுயாட்சியின் பாதுகாவலர் என்றும், ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை வழிநடத்தியவர் என்றும் தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதி வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பது வியப்பாக இருக்கிறது.

கருணாநிதியை பொறுத்தவரையில், மாநில சுயாட்சி மற்றும் மொழிக் கொள்கையைவிட, தன் மகன் மற்றும் பேரன் மத்திய அமைச்சரவையில் இருப்பதும், மத்திய கூட்டணி அரசில் தனது கட்சி தொடர்ந்து நீடிப்பதும்தான் மிக முக்கியமானது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil