Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நளினி உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

நளினி உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
, வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (09:39 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது.
FILE

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த 18 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதன் அடிப்படையில், அவர்கள் 3 பேரையும் மற்றும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்ய 19 ஆம் தேதி தீர்மானித்த தமிழக அரசு, அதுபற்றி 3 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

ஆனால் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து 20 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு, அவர்கள் மூவரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோரி தமிழக அரசு, சிறைத்துறை ஐ.ஜி., வேலூர் மத்திய சிறை சூப்பிரண்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை வருகிற மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், ஆயுள்தண்டனை அனுபவிக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, இந்த வழக்கில் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் விடுதலைக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசுக்கு முகாந்திரம் ஏதுமில்லை என்று வாதிட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவு குறித்து கருத்து தெரிவிக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு கேட்டிருந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் முன்பே இப்படி ஒரு மனுவை மத்திய அரசு அவசரமாக தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த வழக்கில் யார் அவசரப்படுகிறார்கள்? மத்திய அரசா அல்லது மாநில அரசா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்த மனுவின் அம்சங்களை ஆய்வு செய்யும் முன் இது விசாரணைக்கு தகுதியானதுதானா? என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று கூறிய நீதிபதிகள், இந்த பிரச்சனை சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அத்துடன், ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலத்தில் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான வழிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.

அதன்பிறகு, நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஏற்கனவே முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலையை எதிர்க்கும் மனுவும் அன்று தான் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. எனவே அன்று இரு மனுக்களின் மீதான விசாரணையும் நடைபெறும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil