Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தூக்கிலிடுவதுதான் இந்திய ஜனநாயகமா? - சீமான் கேள்வி

தூக்கிலிடுவதுதான் இந்திய ஜனநாயகமா? - சீமான் கேள்வி
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2011 (16:30 IST)
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரிப் போராடி வரும் சீமான் மூவரைத் தூக்கிலிடுவதுதான் பெருமை மிகுந்த இந்திய ஜனநாயகமா என்றார்

திருச்சியில் சனிக்கிழமை இரவு நாம் தமிழர் கட்சி சார்பில் தூக்குத் தண்டனைக்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

ராஜீவ் காந்தி மரணத்தைக் காட்டி, தமிழ் இனத்தை கொன்றுவிட்டது காங்கிரஸ் கட்சி. மூவரின் உயிரை முன் நிறுத்தி, தமிழினத்தை வஞ்சிக்கத் துடிக்கிறது காங்கிரஸ். இலங்கையில் படுகொலை நடந்தபோது, அங்குள்ள தமிழர்கள், 5 கோடி ரத்த உறவு தமிழர்கள் காப்பாற்றுவார்கள் என நினைத்தனர். ஆனால், நாம் அவர்களைக் கைவிட்டோம்.

இப்போது, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் 8 கோடி தமிழர்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்பியுள்ளனர். அவர்களைக் கைவிட்டு விடாதீர்கள்.

ராஜீவ் காந்தியை இழந்துவிட்டோம் என்கிறார்கள். ராஜீவ் காந்தியால் தமிழ் இனத்தையே இழந்து விட்டோம். ஒரு மரணத்துக்காக, இலங்கையில் 1.75 லட்சம் மக்களைக் கொன்றார்கள். இப்போது, மூவரைக் கொல்லத் துடிக்கிறார்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன், மருதுபாண்டியர், தீரன் சின்னமலை ஆகியோர் தூக்கிலிடப்பட்டபோது, அதைத் தடுக்க முடியவில்லை. அவர்கள் அடிமைத் தேசத்தில் தூக்கிலிடப்பட்டார்கள்.

இது சுதந்திர இந்தியா, இந்த மூவரின் தூக்குத் தண்டனையைத் தடுக்கும் வலிமையைத் தாருங்கள்.

21 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டார்கள். ஒரு குற்றத்துக்கு இரு தண்டனை ஏற்புடையதா? 29-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்குக் தாக்கல் செய்கிறோம். தூக்கு+த் தண்டனை குறைக்கப்படாவிட்டால், எங்களுக்குத் தண்டனை தரும் சூழ்நிலை ஏற்படும்.

கடைசி வரை கெஞ்சுகிறோம்; கருணைக் காட்டுங்கள். தமிழர் இனம் தூக்குத் தண்டனைக்கு எதிராக திரண்டுள்ளதை புரிந்து கொள்ளுங்கள்.

இன்று கருணாநிதி கருணை மனு குறித்து கடிதம் எழுதுகிறார். 6 மாதங்களுக்கு முன்னர் எழுதியிருக்க வேண்டியதுதானே? தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிக்க முடிந்த கருணாநிதியால், இவர்களின் தூக்குத் தண்டனையைத் தடுக்கு முடியவில்லையா?

ராஜீவ் காந்தியைக் கொன்றவருக்கு தூக்கு. ஆனால், இலங்கையில் தமிழ் இனத்தையே கொன்ற ராஜபட்சவை அழைத்து விருந்து தருகிறார்கள். குற்றத்துக்கு தண்டனை வேண்டாம் என்று சொல்லவில்லை. எந்தக் குற்றத்துக்கும் மரணம் தண்டனை அல்ல என்கிறோம்.

மூவரை தூக்கிலிடுவதுதான் பெருமை மிகுந்த இந்திய ஜனநாயகமா? என்றார் சீமான்.

கூட்டத்தில் பேராசிரியர்கள் தீரன், பால்நியூமன், சாகுல் ஹமீது, ஊடகவியலாளர் அய்யநாதன், வழக்குரைஞர்கள் சந்திரசேகர், நல்லதுரை, குமார், சிவக்குமரன், கயல்விழி, மணி செந்தில், பிரபு, அன்பு தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil