உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரமுகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த லரி செல்லிமியர் என்பவர் கடந்த மே மாதம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் சிகிச்சை முடிந்து அமெரிக்கா செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரது சூட்கேசை அதிகாரிகள் சோதனை செய்தபோது துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் பிணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் லரி செல்லிமியர் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், லரி செல்லிமியர் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் கடவுசீட்டை (பாஸ் போர்ட்) ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
மேலும் லரி செல்லிமியர் அயல்நாட்டுகாரர் என்பதால் வழக்கு விசாரணையை காவல்துறையினர் விரைந்து நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம் வழக்கை விசாரித்து 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.