Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திராவிட இயக்கங்கள் பற்றி கூற மோடிக்கு தகுதி இல்லை - கனிமொழி

திராவிட இயக்கங்கள் பற்றி கூற மோடிக்கு தகுதி இல்லை - கனிமொழி

Ilavarasan

, செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (13:54 IST)
தமிழக நலனில் திமுக, அதிமுகவுக்கு அக்கறை இல்லை என்று திராவிட இயக்கங்கள் பற்றி கூற மோடிக்கு தகுதி இல்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
 
சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் உமாராணி செல்வராஜை ஆதரித்து கனிமொழி எம்.பி. திறந்த ஜீப்பில் சேலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி, புதுரோடு பழைய சூரமங்கலம், தர்மன்நகர், 3ரோடு, மெய்யனூர், 5ரோடு அழகாபுரம், அஸ்தம்பட்டி, ஜான்சன் பேட்டை பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
 
பின்னர் அவர் கன்னங்குறிச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
 
இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி.பேசியதாவது:–
 
கழகத்திற்கு தூணாக இருந்தவர் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகம். அவர் சேலம் மாவட்டத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்தார். தலைவரிடம் எடுத்து சொல்லி தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார். இப்போது எந்த திட்டங்களும் நடக்கவில்லை. இதற்கு பொதுமக்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து தலைவர் கலைஞரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
 
தலைவர் கலைஞர் தான் அப்பேத்கர் பெயரில் கலைக்கல்லூரி கொண்டு வந்தார். அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலைக்கழகமும் கொண்டு வந்தார். யார் யாருக்கு இட ஒதுக்கீடு தேவையோ அவற்றை செய்து கொடுத்தவர் தான் தலைவர் கலைஞர். வேறு யாரும் இட ஒதுக்கீடு பற்றி பேசவில்லை.
 
சேலம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை உள்ளதாக கூறினர். இதுபோன்றுத்தான் தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனை தீர திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள். இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இதனால் அனைவரும் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும். சேலத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்த தி.மு.கத்தான். இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேற்ற உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். இதுபோல் திடக்கழிவு மேலாண்மை திட்டம் நடந்த வந்த பகுதி எரிந்து விட்டது. இதனால் குப்பைகள் எங்கு கொட்டுவது என தெரியாமல் விழிக்கிறார்கள். இந்த நிலை மாற தி.மு.கவிற்கு வாக்களியுங்கள் என்று அவர் பேசினார்.
 
முன்னதாக அவர் சேலம் ரெட்டியூரில் நடந்த பிரசாரத்தில் பேசியதாவது:–
 
தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுக, அ.திமுக போன்ற கட்சிகள் மாநிலத்தை பாழாக்கி விட்டதாக மோடி கூறுகிறார். ஆனால் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை, ஆண், பெண் விகிதாசாரம், குழந்தைகள் இறப்பு விகிதம், மனித வளம் போன்ற பெரும்பாலான விஷயங்களில் தமிழகத்தை விட குஜராத் மிகவும் பின்தங்கி உள்ளது.
 
தமிழகத்தை முன்னேற்றியதில் திமுகவிற்கு பெரும் பங்கு உள்ளது. திராவிட இயக்கங்களின் தொடர் போராட்டங்களால் தான் அனைவரும் இணக்கமாக வாழும் சூழல் உருவாகி உள்ளது. ஆனால் குஜராத்தில் பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை இன்னும் உள்ளது. தமிழக நலனில் திமுக, அதிமுகவுக்கு அக்கறை இல்லை என்று திராவிட இயக்கங்கள் பற்றி கூற மோடிக்கு தகுதி இல்லை அவர் கூறினார்.
 
இந்த கூட்டத்திற்கு சேலம் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். கன்னங்குறிச்சி பேரூர் செயலாளர் பூபதி, கன்னங் குறிச்சி பேரூராட்சி தலைவர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
இந்த நிகழ்ச்சியில் வேட்பாளர் உமாராணி, சேலம் மாநகர செயலாளர் எஸ்.டி.கலையமுதன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி ராஜா, சேலம் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் உள்பட பலர் பேசினர்.

Share this Story:

Follow Webdunia tamil